கச்சத்தீவு பிரச்னைக்கு காங்கிரஸ், திமுகதான் பொறுப்பு: ஜெய்சங்கர்

கச்சத்தீவு பிரச்னைக்கு காங்கிரஸ், திமுகதான் பொறுப்பு: ஜெய்சங்கர்

"இந்த விவகாரம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு 21 முறை பதில் கடிதம் எழுதியுள்ளேன்."

கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக தங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்ற அணுகுமுறையைக் கடைபிடிப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

கச்சத்தீவு இலங்கைக்கு விட்டுக்கொடுக்கப்பட்ட விவகாரம் நேற்று முதல் பேசுபொருளாகியுள்ள நிலையில், தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரும், பாஜக தலைவருமான ஜெய்சங்கர் செய்தியாளர்களைச் சந்தித்து இதுதொடர்பாக விளக்கம் அளித்தார்.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:

"1974-ல் இந்தியா மற்றும் இலங்கை இடையே கடல் எல்லை வரையறுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. கடல் எல்லை வரையறுக்கப்படும்போது கச்சத்தீவு இலங்கை எல்லைக்குள் வைக்கப்பட்டது. 1976-ல் மீன் பிடிப்பதற்கான உரிமையும் விட்டுக்கொடுக்கப்பட்டது.

'இந்த சிறிய தீவை முக்கியத்துவம் வாய்ந்ததாக நான் கருதவில்லை. இதைக் கொடுப்பதில் எந்த ஆட்சேபனையும் கிடையாது. இதுமாதிரியான விவகாரங்கள் நீண்ட நாள்களாக நிலுவையில் இருப்பதிலும், நாடாளுமன்றத்தில் திரும்பத் திரும்ப எழுப்புவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.'

1961-ல் அப்போதைய பிரதமர் நேருவின் பார்வை இப்படிதான் இருந்திருக்கிறது. அவரைப் பொறுத்தவரை இதுவொரு சிறிய தீவு. இதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்று பிரச்னைக்குரியதாகவே கச்சத்தீவை அவர் அணுகியிருக்கிறார். இதை எவ்வளவு சீக்கிரம் கொடுக்கிறோமோ அவ்வளவு நல்லது என்று நேரு எண்ணியிருக்கிறார். இந்திரா காந்தி காலம் வரை இதே பார்வைதான் தொடர்ந்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் 6,184 மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 1,175 மீனவப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கச்சத்தீவு விவகாரத்தின் பின்னணி இதுதான்.

கடந்த 5 ஆண்டுகளில், நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சிகள் கச்சத்தீவு மற்றும் மீனவர்கள் பிரச்னை குறித்துத் தொடர்ச்சியாக எழுப்பியுள்ளன. கேள்வி நேர விவாதங்களில் பேசப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் எனக்குப் பல முறை கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு 21 முறை பதில் கடிதம் எழுதியுள்ளேன். இது திடீரென்று பூதாகரமான விவகாரம் கிடையாது. இது இன்றைக்கும் நிலுவையில் இருக்கக்கூடிய பிரச்னை.

நாடாளுமன்றத்திலும், தமிழ்நாட்டிலும் இந்த விவகாரம் குறித்து நிறைய விவாதிக்கப்பட்டுள்ளன. இது மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான கடிதப் பரிமாற்றமாகவே இருந்துள்ளன. தற்போது தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியும் இதில் ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளன. காங்கிரஸ் மற்றும் திமுக இந்த விவகாரத்தில் தங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்ற அணுகுமுறையைக் கடைபிடிக்கின்றன.

இதைத் தீர்ப்பதற்கான அதிகாரம் மத்திய அரசிடம் இருந்தாலும், இந்த விவகாரம் ஏதோ இன்றைக்குத் தொடங்கியதைப் போலவும், இதற்கு வரலாறு எதுவும் கிடையாது என்பது போன்றும் ஒரு பிம்பத்தைக் கட்டமைக்க முயற்சிக்கிறார்கள்.

கட்சத்தீவை விட்டுக்கொடுத்தது யார் என்பது நமக்குத் தெரியும். ஆனால், அதை மறைத்தது யார் என்பதுதான் தெரியவில்லை. இந்தச் சூழல் உருவானதற்கான காரணம் என்ன என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

இந்த விவகாரம் குறித்து மக்கள் தெரிந்துகொள்வது அவசியம். இந்த விவகாரத்தை பொதுமக்களின் பார்வையிலிருந்து நீண்ட காலமாக மறைத்து வைத்தது யார் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்றைக்கும் மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள், படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன, இந்த விவகாரம் இன்றும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்தப் பிரச்னைக்குக் காரணமான இரு கட்சிகளே இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புகின்றன.

கைது நடவடிக்கை நடந்தபோதெல்லாம் மீனவர்கள் எப்படி விடுவிக்கப்படுகிறார்கள்? சென்னையிலிருந்தபடி அறிக்கைகள் வெளியிடுவது நன்றாகதான் உள்ளது. ஆனால், மீனவர்களை விடுவிக்கப்படுவதற்கான வேலையைப் பார்ப்பது நாங்கள்" என்றார் ஜெய்சங்கர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in