மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் கடலூர் தொகுதியின் பாமக வேட்பாளராக போட்டியிட்ட இயக்குநர் தங்கர் பச்சான் தோல்வியடைந்தார்.
இந்நிலையில் தோல்வியடைந்தாலும் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்வதற்காகக் கடலூர் சென்ற தங்கர் பச்சான், மக்களிடையே பேசியதாவது:
“உங்களுக்கு அரசியல் வேண்டாம் என பலரும் என்னிடம் சொல்கிறார்கள், பின்பு இங்கு இருக்கும் பிரச்னைகளை யார் தான் சரிசெய்வது? காமராஜர், அறிஞர் அண்ணாவைத் தோற்கடித்த பூமி தான் இது. அவர்களைத் தோற்கடித்ததற்காக மக்கள் மிகவும் வருந்தினர். அந்த நிலை மீண்டும் வரும். கடந்த முறை நீங்கள் தேர்ந்தெடுத்த 38 பேரும் ஒன்றும் செய்யவில்லை. தற்போது மீண்டும் 40 நபர்களை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். கடந்த 5 வருடங்களில் எந்த திட்டத்தையும் மத்திய அரசால் செயல்படுத்த முடியவில்லை. செயல்படுத்தவிடாமல் முரண்டுபிடிக்கிறார்கள்.
என் மக்களும் என் மண்ணும் எனக்கு முக்கியம். நான் செய்யும் அரசியலும் படங்களும் உங்களுக்காகத் தான். போராட்ட குணம் இல்லாத உங்களுக்கெல்லாம் எதற்கு வாக்கு? எதற்கு தேர்தல்? இது எனக்கு அவசியமற்ற ஒன்று. இனியாவது மாறுங்கள். இல்லையெனில் உங்கள் பிள்ளைகளும் அந்த சின்னங்களுக்கு வாக்களித்து அடிமையாகி மறைந்துவிடுவார்கள்” என்றார்.