
அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் குரலாகப் பேசுகிறார் என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.
தில்லியில் செப்டம்பர் 3 (நேற்று) நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நான்கு அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி வரியை 2 அடுக்காகக் குறைத்து அறிவிப்புகள் வெளியாகின. இதைப் பாராட்டிய எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை முழு மனத்துடன் பாராட்டுவதாகக் குறிப்பிட்டார். அவரது எக்ஸ் தள பதிவுக்குப் பதிலளித்த தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, எடப்பாடி பழனிசாமி பாஜகவின் குரலாக மாறிவிட்டதாக விமர்சித்தார்.
அமைச்சர் தங்கம் தென்னரசின் எக்ஸ் தள பதிவில், "அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் குரலாக மாறிவிட்டதாக நான் கருதுகிறேன். நீங்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி விதிமுறைகளைப் பற்றி ஆர்வத்துடன் புகழ்ந்து பேசும்போது, மாநிலங்களின் வருவாயைப் பாதுகாக்க மற்றும் நிதி தன்னாட்சியைக் காக்க, மத்திய அரசு முறையாக நிதிப் பங்களிப்பு அல்லது வருவாய் வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும் என்று ஏன் ஒரு வரியில் கூட குறிப்பிடவில்லை?
தமிழ்நாடு போன்ற முன்னணி மாநிலங்கள், நாட்டின் வளர்ச்சிக்குத் தங்கள் பங்களிப்பைத் தொடர வலுவான நிதி ஆதரவுக்குத் தகுதியானவை என்பது உங்களுக்குத் தெரியும்.
ஒரு தலைவராக, தமிழ்நாட்டின் நலன்களைப் பாதுகாக்க மத்திய அரசிடம் இருந்து தெளிவான உறுதிமொழியை ஏன் நீங்கள் கோரவில்லை? தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும், கூட்டாட்சி நீதிக்கும் உங்கள் குரலை உயர்த்துவீர்களா?
தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், பாஜகவுடனான கூட்டணி நலனுக்காக தமிழ்நாட்டு மக்களின் நிதி நலம் மற்றும் உரிமைகளை நீங்கள் புறக்கணிக்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Thangam Thenarasu | Minister Thangam Thenarasu | Edappadi K Palaniswamy | Thangam Thenarasu comments on EPS | EPS on GST | Thangam Tennarasu on GST | DMK | ADMK