தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் தகைசால் தமிழர் விருதுக்கு குமரி அனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 15-ல் சுதந்திர தின விழாவில் குமரி அனந்தனுக்கு விருதுடன் ரூ. 10 லட்சத்துக்கான காசோலையையும், பாராட்டுச் சான்றிதழையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கவுள்ளார்.
தமிழ்நாட்டுக்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தகைசால் தமிழர் என்ற விருதை உருவாக்கவும், இந்த விருதுக்கான விருதாளரைத் தேர்வு செய்ய ஒரு குழுவை அமைக்கவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 2021-ல் உத்தரவிட்டார்.
இந்த விருது கடந்த 3 ஆண்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரைய்யா, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, திராவிடர் கழகத் தலைவர் வீரமணி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, சட்டமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் காந்தி ஃபோரம் அமைப்பின் தலைவரும் இலக்கியச் செல்வராகவும், இலக்கியக் கடலாகவும், எவரோடும் பகை கொள்ளாத பண்பாட்டுச் செம்மலாகவும் விளங்கும் குமரி அனந்தனைப் பெருமைப்படுத்தும் வகையில் இவ்வாண்டுக்கான தகைசால் தமிழர் விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு இவ்விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.