தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு தங்கள் போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான டிட்டோ ஜாக் அறிவித்துள்ளது.
தங்களின் 31 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழக அரசை வலியுறுத்தி, வரும் செப்.30 மற்றும் அக்.1-ல் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான டிட்டோ ஜாக் அறிவித்தது.
மத்திய அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவது, ஆசிரியர்களின் பதவி உயர்வை தடுக்கும் வகையில் இருக்கும் அரசாணை எண் 243-ஐ ரத்து செய்வது போன்ற 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறது டிட்டோ ஜாக் குழு.
இதைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் இன்று (செப்.23) காலை டிட்டோ ஜாக் குழு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. அந்தப் பேச்சுவார்த்தையில் தங்களது அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுமாறு அமைச்சரிடம் டிட்டோ ஜாக் நிர்வாகிகள் குழு வலியுறுத்தினர்.
இதனை அடுத்து புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், `தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியைப் பெற்ற பிறகு, தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் நிதி சார்ந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும், பிற கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார். பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்தது’ என்றார் டிட்டோ ஜாக் நிர்வாகி ராஜேந்திரன்.