
ஃபெஞ்சல் புயலை ஒட்டி அனைத்து தொலை தொடர்பு சேவை நிறுவனங்களுக்கும் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது மத்திய தொலை தொடர்பு அமைச்சகம்.
ஃபெஞ்சல் புயலை ஒட்டி ஏற்பட்டுள்ள பேரிடர் சூழலை கருத்தில் கொண்டு பி.எஸ்.என்.எல், ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா, ஜியோ ஆகிய தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் intra circle roaming வசதியை செயல்படுத்துமாறு தொலை தொடர்பு அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் இந்த intra circle roaming வசதியை செயல்படுத்தும் பட்சத்தில், ஒரு வேளை சிக்னல் இல்லாவிட்டால் கைபேசியில் ரோமிங் (roaming) வசதியை ஆன் செய்தாலே வாடிக்கையாளர்கள் பிறரைத் தொடர்பு கொண்டு எளிதில் பேச முடியும்.
இந்த intra circle roaming வசதியை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் இன்று (டிச.1) தொடங்கி வரும் டிசம்பர் 3-ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை செயல்படுத்துமாறு தொலைதொடர்பு சேவை நிறுவனங்களுக்கு, மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தமிழகத்தில் இருக்கும் பிற மாநில எண்களை உபயோகிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இந்த intra circle roaming வசதியை தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் நீட்டிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.