
திருச்சியிலிருந்து ஷார்ஜா புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இரண்டு மணி நேரத்துக்கும் மேல் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது திருச்சி விமான நிலையத்தில் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
திருச்சியிலிருந்து இன்று மாலை 5.40 மணியளவில் 141 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் ஷார்ஜா புறப்பட்டது. இந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால், சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக இந்த விமானம் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தது.
விமானத்தைப் பாதுகாப்பாக தரையிறக்குவதற்காக முதலில் விமானத்தில் உள்ள எரிபொருளைக் குறைக்க அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இதன் காரணமாக, எரிபொருளைக் குறைக்கும் நோக்கில் இந்த விமானம் சுமார் இரண்டு மணி நேரமாக திருச்சி, புதுக்கோட்டை வான் பரப்பில் வட்டமடித்துக் கொண்டிருந்தது.
இதனிடையே, திருச்சி விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுன. மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. காவல் துறை உயர் அதிகாரிகள் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்கள்.
விமானம் எப்போது தரையிறங்கும் என்ற கேள்வி நீண்ட நேரம் இருந்தது. இதைத் தொடர்ந்து, விமானம் இரவு 8.15 மணிக்குத் தரையிறங்கும் என அதிகாரிகள் தெரிவித்தார்கள். இதன்படி, ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வெற்றிகரமாக எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் பாதுகாப்பான முறையில் திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது.