டாஸ்மாக் விவகாரம்: சென்னையில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை!
சென்னையில் உள்ள டாஸ்மாக் அதிகாரியின் வீடு உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை இன்று (மே 16) நடைபெற்றது. டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், கடந்த மார்ச் 6 முதல் 8-ம் தேதி வரையில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கல், மதுபானங்களை மதுபானக் கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் உள்ளிட்டவற்றில் ரூ. 1,000 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
இந்த சோதனையை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக்கோரி டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்த முழு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், மணப்பாக்கம் சி.ஆர்.புரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் இல்லத்தில் இன்று (மே 16) அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. சோதனைக்குப் பிறகு, மேல் விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாகனை அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சூளைமேடு பகுதியில் இருக்கும் எஸ்.என்.ஜே. நிறுவனம், தேனாம்பேட்டையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் வீடு, திருவல்லிக்கேணியில் உள்ள தொழிலதிபர் தேவக்குமாரின் இல்லம் போன்ற இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடைபெற்றுள்ளது.