டாஸ்மாக் ஊழல் குறித்து நியாயமான விசாரணை தேவை: விஜய் அறிக்கை

இந்த மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை முறையான, நியாயமான விசாரணைக்கு உட்படுத்தி...
டாஸ்மாக் ஊழல் குறித்து நியாயமான விசாரணை தேவை: விஜய் அறிக்கை
ANI
1 min read

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் அமலாக்கத்துறையின் அறிக்கையை முன்வைத்து தன்னுடைய விமர்சனங்களை வெளியிட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

தமிழ்நாடு முழுவதும், திமுக அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக் தொடர்புடைய பல்வேறு நிறுவனங்கள்/ நபர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் கடந்த 6-ம் தேதி அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அச்சோதனையின் முடிவாக, அமலாக்கத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கணக்கில் வராத பணம் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

டாஸ்மாக் பணியாளர்களைப் பணியமர்த்துதல், இடமாற்றம் செய்தல், வாகனங்கள் டெண்டர் ஒதுக்கீடு, பார் உரிமம் வழங்கும் டெண்டர் ஒதுக்கீடு, கடைகளில் விற்பனையாகும் ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் பெறப்பட்ட ரூபாய் 10 முதல் 30 வரையிலான கூடுதல் தொகை, டிஸ்டில்லரீஸ் மற்றும் பாட்டிலிங் கம்பெனிகள் மூலம் நடந்த முறைகேடுகளைப் பற்றிப் பெரிய பட்டியலே அந்த அறிக்கையில் வழங்கப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை வழங்குவதைப் பெருமையாகப் பறைசாற்றும் இதே அரசுதான் மக்கள் நலனைக் கெடுத்து, மதுவிற்கு அடிமையாக்கும் மது விற்பனையையும் செய்கிறது. அதே மதுவை வைத்துத் தான் முறைகேடும் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. எவ்வகையிலும் இதுபோன்ற முறைகேடுகளை ஏற்கவே இயலாது எனப் பொதுமக்களே கோபத்தில் கொந்தளிக்கத் தொடங்கி உள்ளனர்.

ஆகவே, இந்த மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை முறையான, நியாயமான விசாரணைக்கு உட்படுத்தி, உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in