

சட்டமன்ற தேர்தலில் 2.50 கோடி வாக்கு இலக்கு. அடுத்த இரண்டு மாதங்களுக்கு திமுக நிர்வாகிகளுக்கு ஓய்வே கிடையாது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
திமுகவின் தெற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு இன்று மதுரை உத்தங்குடியில் நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, டி.ஆர். பாலு, அமைச்சர்கள் மூர்த்தி, கே.என். நேரு, தங்கம் தென்னரசு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஐ. பெரியசாமி, மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:-
9.3 லட்சம் நிர்வாகிகளுடன் சந்திப்பு
சித்திரைத் திருவிழா போல் கூடியிருக்கும் தொண்டர்களைப் பார்த்து உற்சாகம் அடைகிறேன். உத்தங்குடி முழுவதும் உடன்பிறபுகள் குடியேறிவிட்டது போல் உணர்வு. இனி நாமதான். இனி எப்போதுமே நாமதான். கடந்த 2 மாதத்தில் 7 மாநாடுகள் நடத்தி, ஏறத்தாழ 9.3 லட்சத்திற்கும் அதிகமான நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது வெற்றி பெற்றோம். ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தைத் தொடங்கி இந்தியாவிலேயே அதிகளவில் கிட்டத்தட்ட ஒரு கோடி உறுப்பினர்களை அதில் இணைத்தோம். வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிரத் திருத்தம் மூலம் பலரின் பெயர்கள் நீக்கப்பட்டபோதும் யாருடைய பெயரும் நீங்கிடாத வகையில் பம்பரமாக சுழன்ற இயக்கம் திமுகதான்.
2 மாதங்களுக்கு ஓய்வே கிடையாது
மதுரை மாநாடு வெறும் ட்ரைலர்தான், திருச்சியில் தான் மெயின் பிக்சர் இருக்கிறது. திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் பத்து லட்சம் பேரை திரட்ட திட்டமிட்டிருக்கிறோம். அடுத்த இரண்டு மாதங்களுக்கு திமுகவினருக்கு ஓய்வே கிடையாது. எல்லாவற்றையும் திட்டமிட்டு வைத்திருக்கிறோம். சமூக வலைதளமாக இருந்தாலும், வீடுகளாக இருந்தாலும் திமுகவினர் தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு பூத்துக்கும் 350 வாக்குகள் என்ற இலக்கை வைத்துக் கொண்டாலே எளிதாக வெற்றி பெற்று விடலாம். இந்தத் தேர்தலில் 2.50 கோடி வாக்குகளுக்குக் குறையாமல் நாம் வாங்க வேண்டும். அது உங்கள் பொறுப்பு. இலக்கை அடைய உதவுங்கள். 200 தொகுதிகள் நிச்சயம். அதற்கு மேல் வெற்றி பெறுவது நமது லட்சியம்.
திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்
சமீபத்தில் நாம் முன்கூட்டியே ரூ. 5,000 உரிமைத் தொகையைக் கொடுத்ததும் அது நமது சர்ஜிகல் ஸ்டிரைக் என்று சொன்னார்கள். அந்த அளவுக்கு நமது செயல்பாடு, எதிரிகளால் கணிக்க முடியாதபடி இருந்தது. அதே சமயம் மற்றொரு விஷயமும் செய்திகளில் இடம்பெறது. காலையில் நம் இனிப்பன அதிர்ச்சியால் மகிழ்ச்சியில் இருந்த மக்கள், உடனே அந்தப் பணத்தை வங்கிகளில் இருந்து எடுத்துவிட்டார்கள். அதற்குக் காரணம் மத்திய அரசு மீதுள்ள பயம். எங்கே மத்திய அரசு ரூ. 5,000 பணத்தை எடுத்துக் கொள்ளுமோ என்ற பயத்தில் மக்கள் அதை எடுத்துவிட்டார்கள். இதுதான் மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கை. மக்களுக்குக் கொடுத்தால் அது திமுக அரசு. மக்களிடமிருந்து எடுத்தால் அது மத்திய அரசு. தமிழ்நாட்டில் வரலாறு காணாத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது எதிரிகளின் கண்களை உறுத்துகிறது.
மதுரைக்கு ஏன் மெட்ரோ இல்லை?
சமீபத்தில் பிரதமர் மோடி பேசிய காணொளி ஒன்று வெளியானது. அதில் அவர் இலவச பேருந்து பயணத் திட்டதால் மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததாகச் சொல்லியிருக்கிறார். மெட்ரோ ரயில்களைப் பற்றி இவ்வளவு அக்கறைப்படும் பிரதமர் மோடியிடம் மதுரைக்கு ஏன் மெட்ரோ ரயில் சேவை தர மறுக்கிறீர்கள் என்று மதுரை மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும். நியாயமாகப் பார்த்தால் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் கோரிக்கையாகக் கூட இதையெல்லாம் கேட்கத் துணிச்சல் இல்லாத துரோகியாக அவர் மாறிவிட்டார். ஆனால் நாம் எடப்பாடி பழனிசாமி போல் கோழைகள் அல்ல. ஆட்சி, பதவி ஏன் உயிரே போனாலும் கவலைப்படாமல் தமிழ்நாட்டின் கோரிக்கைகளுக்காகக் குரல் கொடுப்போம். வழக்குப் போடுவார்களா? போடட்டும். நாம் பார்க்காத மிசாவா? தடாவா?
தமிழ்நாடு அணியா? தில்லி அணியா?
எதிர்க்கட்சிகளிலேயே திமுகவினர் மீதுதான் பாஜகவினர் அதிகமான சோதனைகளை நடத்தினார்கள். நமது அமைச்சர்களுக்குத்தான் அதிக அழுத்தம் கொடுத்து, ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்தலாம் என்று பார்க்கிறார்கள். அவசர நிலையையே பார்த்தது எங்கள் திமுக. அதனால் உங்கள் சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற எந்த சித்து விளையாட்டிற்கும் அஞ்ச மாட்டோம். தேர்தல் பணி, தொகுதிப் பங்கீடு, கூட்டணி என அனைத்திலும் நாம்தான் முதலிடத்தில் இருக்கிறோம். தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா என்ற கேள்வியை மக்களிடம் எழுப்புங்கள். தமிழ்நாடு அணி வெல்ல வேண்டும் என்றால் திமுக வெல்ல வேண்டும்” என்றார்.
The target of 2.50 crore votes in the assembly elections. Chief Minister M.K. Stalin said that DMK executives will have no rest for the next two months.