ஹிந்தி மாத நிறைவு விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் திராவிடநல் திருநாடும் என்ற வரி தவிர்க்கப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் (தூர்தர்ஷன் தமிழ்) பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து ஹிந்தி மாதம் நிறைவு விழா கொண்டாட்டங்களும் நடைபெற்றன. ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக இதில் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சி தொடக்கத்தின்போது தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்கள் பாடப்பட்டன. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின்போது, 'தெக்கணும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடு' என்ற வரிகள் தவிர்க்கப்பட்டன.
ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் திராவிடம் என்ற சொல் இடம்பெற்றுள்ள வரிகள் தவிர்க்கப்பட்டது, அரசியல் களத்தில் சர்ச்சையை உண்டாக்கியது. முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட பலரும் இதற்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், “இன்று சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் ஆளுனர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பெருமைக்குரிய தமிழ்தாய் வாழ்த்து பாடும் பொழுது அதில் வரக்கூடிய “தெக்கனமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரிகள் புறக்கணிக்கப்பட்டது மாபெரும் தவறாகும்.
இச்செயல் மிகவும் கண்டனத்திற்குரியது. திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி. திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி.
திராவிடம் என்ற சொல் உலகின் தொன்மையான நாகரீகத்தின் குறியீடு. தமிழக மக்களின் உணர்வை புண்படுத்தும், திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும் வேலைகளை எவர் செய்து இருந்தாலும் கைவிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.