தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் பொறுப்பேற்றுள்ளார். தற்போது தலைமைச் செயலாளராக இருக்கும் சிவ்தாஸ் மீனா நேற்று (ஆகஸ்ட் 19) தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், புதிய தலைமை செயலாளர் பொறுப்பேற்றுள்ளார்.
1989-ல் தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக பணி நியமனம் பெற்ற சிவ்தாஸ் மீனா ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழகத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட இவர், வரும் அக்டோபர் மாதம் ஓய்வு பெற உள்ளார். இதை அடுத்து தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட புதிய தலைமைச் செயலாளர் முருகானந்தம் 1991-ல் தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக பணி நியமனம் பெற்றார்.
2021-ல் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும் நிதித்துறை செயலாளராக செயல்பட்ட முருகானந்தம், அன்றைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த இரண்டு தமிழக பட்ஜெட்களின் தயாரிப்பில் முக்கியப்பங்கு வகித்தார்.
பிறகு கடந்த வருடம் மே மாதம் தமிழக முதல்வரின் தனிச் செயலாளராக பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார் முருகானந்தம். இந்நிலையில் தமிழகத்தின் 50-வது தலைமைச் செயலாளராக இன்று காலை அவர் பொறுப்பேற்றுள்ளார்.
இதன் மூலம் பட்டியலின பிரிவைச் சேர்ந்த 3-வது தலைமைச் செயலாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் முருகானந்தம். ஏற்கனவே பட்டியலின பிரிவைச் சேர்ந்த பத்மநாபன் 1985-ல் தலைமைச் செயலாளராகவும், ஏ.பி. முத்துசாமி 1999-ல் தலைமைச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளனர்.