
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மொத்த கடன் மதிப்பு 3 மடங்கு உயர்ந்துள்ளதாக இந்திய கணக்கு தணிக்கை துறையான சிஏஜியின் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் இந்திய கணக்கு தணிக்கை துறையைச் சேர்ந்த முதன்மை கணக்காய்வு தலைவர் ஜெய்சங்கர் இன்று (அக்.10) மாலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியவை பின்வருமாறு,
`இதை செயலாக்க தணிக்கை (performance audit) அறிக்கை என்று கூறுவோம். 31 மார்ச் 2023-ல் நிறைவடைந்த கடந்த நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் மாநில நிதி தணிக்கை, நிதி மீதான கண்ணோட்டம், வரவு செலவுத் திட்ட மேலாண்மை மற்றும் கணக்குகளின் தரம், நிதிநிலை அறிக்கைகளின் நடைமுறைகள் மற்றும் மாநில நிதி தொடர்பான இதர விவரங்களை இந்த அறிக்கை வழங்குகிறது.
தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (2022-2023 நிதியாண்டு) மதிப்பு ரூ. 23,64,514 கோடியாக இருந்தது. அதற்கு முந்தைய நிதியாண்டை ஒப்பிடும்போது இது 14 சதவீதம் அதிகமாகும். தொழில்துறையும், சேவை துறையும் இதற்கான அதிக பங்களிப்பை வழங்கியுள்ளன. தேசிய சராசரியைவிட தமிழகத்தின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு அதிகமாகும்.
கடந்த 2017-ல் ரூ. 6,467 கோடியாக இருந்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மொத்த கடன் கடந்த நிதியாண்டின் முடிவில் ரூ. 21,980 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 7 வருடங்களில் போக்குவரத்துக் கழகத்தின் கடன் சுமை 3 மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் கர்நாடக, கேரளா போக்குவரத்துக் கழகங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்திற்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது.
மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்துவதில் தமிழகம் பின் தங்கியுள்ளது. தனி வாரியம் இருந்தும்கூட பணியாளர்களை புதிதாக சேர்ப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சுகாதார துறையின் கீழ் இயங்கும் இயக்குநரகங்களில் காலிப் பணியிடங்கள் 28 சதவீதமாக உள்ளன’ என்றார்.