தமிழ்நாடு இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரம் என்ற நிலையைத் தக்க வைத்துள்ளதாக இன்று ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் மெகா தொழிற்சாலை பணியாளர்கள் குடியிருப்பு வளாகத்தின் திறப்பு விழாவில் பேசினார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், வல்லம் - வடகால் கிராமத்தில் ரூ. 706.50 கோடி செலவில் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களுக்காக பிரம்மாண்டமான குடியிருப்பு வளாகத்தை தமிழக அரசின் சிப்காட் நிறுவனம் கட்டியுள்ளது. இந்த விடுதியால் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றும் 18,720 பெண் பணியாளர்கள் பயன்பெறவுள்ளனர்.
இந்த குடியிருப்பு வளாகத்தைத் திறந்து வைத்து, விழாவில் ஸ்டாலின் பேசியவை பின்வருமாறு:
`தைவான் நாட்டைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் மிகப்பெரிய மின்னணுவியல் உற்பத்தி நிறுவனம். இந்த நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் இரு உற்பத்தி அலகுகளை நிருவியுள்ளது நமக்குக் கிடைத்த பெருமை. 2,000 கோடி ரூபாயில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் 41 ஆயிரம் பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். அதில் 35 ஆயிரம் பேர் பெண்கள்.
இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்தை விடவும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகமாக உள்ளது. பெண்களின் வளர்ச்சிக்காக தமிழ்நாடு எத்தனையோ திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
பணிக்குச் செல்லும் தாய்மார்களின் நலன் கருதி சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள தொழிற்சாலைகளில் ஏற்கனவே 63 குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2021-ல் திராவிட மாடல் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும் தமிழ்நாட்டை தெற்காசியாவிலேயே முன்னணி மாநிலமாக மாற்ற லட்சிய இலக்கைக் கொண்டு செயல்படுகிறோம், அதில் வெற்றியும் பெற்றிருக்கிறோம்.
2023-24 ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.19 சதவீத பங்களிப்புடன் தமிழ்நாடு இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரம் என்ற நிலையை தக்க வைத்துள்ளது. நமது மாநிலத்தில் 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலை இருக்கிறது. 40 ஆயிரம் ஏக்கர் நிலம் கண்டறிய இலக்கு வைக்கப்பட்ட நிலையில் 41,000 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டது. இதில் 12,500 ஏக்கர் நிலம் சிப்காட் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
2030-ம் ஆண்டுக்குள், ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்று நான் ஒரு லட்சிய இலக்கை நிர்ணயித்திருக்கிறேன். தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சிறப்பான செயல்பாடுகள், அந்த இலக்கை நாம் விரைவாக எட்டுவோம் என்று நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது’.