இன்று (அக்.2) தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம்.
தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலாளராகப் பதவி வகித்து வரும் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள பிரதீப் யாதவ் ஐஏஎஸ், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது கால்நடை, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளராக உள்ள கே. கோபால், புதிய உயர்கல்வித் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, கூடுதல் பொறுப்பாக கால்நடை, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையைக் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள ராஜேஷ் லக்கானி, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை செயலாளராக அமுதவள்ளி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளராக உள்ள விஜயராஜ் குமார், மனிதவள மேம்பாட்டுத்துறையைக் கூடுதல் பொறுப்பாகக் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிக் கல்வி ஆணையராக சுந்தரவள்ளியும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநராக விஷ்ணு சந்திரனும், சமூக நல ஆணையராக லில்லியும், துணிநூல் ஆணையராக லலிதாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.