அதிகரித்து வரும் ஸ்க்ரப் டைஃபஸ் காய்ச்சல்: தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் காய்ச்சல், உடல் வலி, தலை வலி குறிப்பாக உடலின் பல்வேறு பகுதிகளில் கருப்பு நிறக் காயங்கள் ஏற்படும்.
அதிகரித்து வரும் ஸ்க்ரப் டைஃபஸ் காய்ச்சல்: தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
1 min read

ஸ்க்ரப் டைஃபஸ் காய்ச்சல் பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வருவதால், அது தொடர்பாக எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.

`ஓரியன்டியா சுட்சுகாமுஷி’ எனப்படும் ஒட்டுண்ணியால், `ஸ்க்ரப் டைஃபஸ்’ காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் காய்ச்சல், உடல் வலி, தலை வலி குறிப்பாக உடலின் பல்வேறு பகுதிகளில் கருப்பு நிறக் காயங்கள் ஏற்படும்.

இந்நிலையில், ஸ்க்ரப் டைஃபஸ் காய்ச்சல் குறித்து தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள எச்சரிக்கை சுற்றரிக்கை பின்வருமாறு,

`தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களில் ஸ்க்ரப் டைஃபஸ் போன்ற நோய்கள் பரவுவதாகத் தகவல்கள் வெளிவருகிறது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும் இந்த நோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக விவசாயத் தொழிலில் ஈடுபடும் நபர்கள், புதர் நிறைந்த பகுதிகளில் வசிக்கும் நபர்கள், காடுகளில் சுற்றுபவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் உள்ளிட்டவர்கள் இந்த நோயால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றால், சம்மந்தப்பட்ட நபர் இறப்பதற்கு வாய்ப்புள்ளது.

எனவே 5 நாட்களுக்கு மேல் அவர்களுக்கு காய்ச்சல் இருந்தால் ஐஜிஎம் ஆன்டிபாடி (IgM antibody), எலிசா (ELISA) உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்கவேண்டும். இந்த நோய் குறித்த விழிப்புணர்வை சுகாதாரத் துறை அதிகாரிகள் அதிக அளவில் மக்களிடையே எடுத்துச்செல்ல வேண்டும்.

ஸ்க்ரப் டைஃபஸ் காய்ச்சலுக்கு உள்ளானவர்களுக்கு, `அஸித்ரோமைசின் (Azithrimycin), டாக்ஸிசைக்லின் (doxycycline)’ போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகள் வழங்கி சிகிச்சை அளிக்க வேண்டும். பிறகு உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் இதயம், நுரையீரல், சிறுநீரகம் சார்ந்து பாதிப்புகள் ஏற்பட்டால், ரத்த நாளத்தின் வழியே திரவ மருந்துகளை செலுத்தி, உயர் சிகிச்சை அளிக்க வேண்டும்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in