கனவு ஆசிரியர் திட்டத்தின் கீழ் பாரிஸுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்களை சுற்றுலா அழைத்துச் செல்கிறது தமிழக பள்ளிக்கல்வித்துறை.
2023-2024 கல்வியாண்டில் தமிழக அரசின் "கனவு ஆசிரியர்" விருது பெற்ற 55 அரசுப் பள்ளி ஆசிரியர்களை பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை சுற்றுலா அழைத்துச் செல்கிறது. பிரான்ஸ் நாட்டின் கல்வி நிறுவனங்களைப் பார்வையிட்டு, பண்பாடு மற்றும் கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகளில் இவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி பின்வருமாறு:
`கனவு ஆசிரியர் திட்டத்தின் கீழ் இரண்டு பிரிவுகளை உருவாக்கி 55 ஆசிரியர்களை தேர்வு செய்தோம். முதற்கட்டமாக தேசிய அளவில், டெஹ்ராடூன் போன்ற இடங்களுக்கு ஆசிரியர்களை அழைத்துச் சென்றோம். இரண்டாம் கட்டமாக முதல்முறையாக பாரிஸுக்கு ஆசிரியர்களை அழைத்துச் செல்கிறோம்.
தொடக்கம், இடைநிலை, உயர்நிலை என அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களுடன் 5 அதிகாரிகளும், நானும் ஒரு வார காலத்துக்குச் செல்கிறோம். அரசுப் பள்ளி மாணவர்களை வெளிநாடு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்த முனைவர் விஜயன் அசோகன், இதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்கிறார்.
நம் ஆட்சி அமைந்தது முதல் ஆசிரியர்கள் சார்ந்து பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம். ஆசிரியர்களையும் நாம் ஊக்கப்படுத்தி அங்கீகரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு புது முயற்சியாக அவர்களை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்கிறோம்’ என்றார்.