அண்ணா பல்கலை. வழக்கு எஃப்.ஐ.ஆரை காவல்துறை வெளியிடவில்லை: தமிழக அரசு

இதுவரை நடந்த விசாரணையில் ஒருவர் மட்டுமே குற்றவாளி எனத் தெரியவந்துள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்தார். ஒருவர் மட்டுமே குற்றவாளி என காவல் ஆணையர் முடிவுக்கு வரவில்லை.
அண்ணா பல்கலை. வழக்கு எஃப்.ஐ.ஆரை காவல்துறை வெளியிடவில்லை: தமிழக அரசு
1 min read

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கின் எஃப்.ஐ.ஆரை காவல்துறை வெளியிடவில்லை என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவி ஒருவர் கடந்த டிச.23-ல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடக்கோரி அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் வரலட்சுமி, சென்னை உயர் நீதிமன்றத்திற்குக் கடிதம் அனுப்பியிருந்தார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், வி. லட்சுமி நாராயணன் அமர்வு இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தியது.

வரலட்சுமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ், `இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றவேண்டும்’ என்று முறையிட்டார். இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் அரசுத் தரப்பு வாதங்களை முன்வைத்தார் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறியவை பின்வருமாறு,

`பாதிக்கப்பட்ட மாணவி தைரியமாகப் புகார் அளிக்க முன்வந்ததற்குப் பாராட்டுகள். அவரைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை. பெண்கள் ஆண்களுடன் பேசக்கூடாது, பாதிக்கப்பட்ட மாணவி அங்கு சென்றிருக்கக்கூடாது என்றெல்லாம் கூறக்கூடாது. காதல் என்பது பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம்.

வழக்கு விசாரணை நடைபெறும்போதே ஆணையர் செய்தியாளர்களைச் சந்திக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கையை வரும் 28-ல் தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும்’ என்றனர்.

இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மீண்டும் நடைபெற்ற விசாரணையில் ஆஜராகி தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் முன்வைத்த வாதங்கள் பின்வருமாறு,

`இந்த வழக்கின் எஃப்.ஐ.ஆரை காவல்துறை வெளியிடவில்லை. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எஃப்.ஐ.ஆர் வெளியானதற்கு என்.ஐ.சிதான் (NIC) பொறுப்பு. இதுவரை நடந்த விசாரணையில் ஒருவர் மட்டுமே குற்றவாளி என தெரிய வந்துள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்தார். ஒருவர் மட்டுமே குற்றவாளி என காவல் ஆணையர் முடிவுக்கு வரவில்லை.

மாணவியிடம் ஞானசேகரன் அத்துமீறியபோது, அவரது கைபேசி ஏர்பிளேன் மோடில்தான் இருந்தது. இதில் யாருக்கும் தொடர்பில்லை. தனக்குப் பின்னால் பெரிய குழு இருப்பதைக் காட்டிக் கொள்ள கைப்பேசியில் பேசுவதுபோல அவர் நாடகமாடியுள்ளார்.

ஞானசேகரன் கைது செய்யப்பட்டபோது அவரது கைபேசி உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் வேறு ஏதாவது கைபேசி வைத்திருந்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in