
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கூட்டுறவு வங்கி சேவைகளை அளிக்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கூட்டுறவு சங்கத்தால் ஆயிரக்கணக்கான ரேஷன் கடைகள் மாநிலம் முழுவதும் இயங்குகின்றன. அதே நேரம் மாநிலம் முழுவதும் செயல்படும் மத்திய கூட்டுறவு வங்கிகள் பல்வேறு சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றன.
இந்நிலையில் இந்த கூட்டுறவு வங்கிகள் வழங்கிவரும் சேவைகளை, கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் ரேஷன் கடைகளில் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குநர்களுக்கு, கூட்டுறவுத்துறை பதிவாளர் சுப்பையன் கடிதம் எழுதியுள்ளார்.
சேமிப்பு, நிரந்தர வைப்பு, கடன் திட்டங்கள் குறித்த தகவல்களை கையேடுகள் மூலம் ரேஷன் கடைகளில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும், மத்திய கூட்டுறவு வங்கிகள் வழங்கும் சேவையை ரேஷன் கடைகளில் வழங்குவதற்கு ஏதுவாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ரேஷன் கடைகளில் தொடங்கப்படும் கூட்டுறவு வங்கி சேமிப்பு கணக்குகள் ஒவ்வொன்றுக்கும், ரேஷன் கடை பணியாளர்களுக்கு ரூ. 5 ஊக்கத்தொகையாக வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் அதிக அளவிலான வங்கிக் கணக்குகளை விவசாயிகள் வைத்துள்ளனர். இதைப்போல, ரேஷன் கடைகள் மூலம் கூட்டுறவு அமைப்புகளில் இளைஞர்களை அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களாக சேர்க்கும் வகையில், இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், இது தொடர்பான தகுந்த அறிவுறுத்தல்களை பொது வினியோக திட்ட துணை பதிவாளர்களுக்கு வழங்கி, இந்தப் பணிகளை தொடர்ந்து கண்காணிக்க கூட்டுறவுத்துறையின் இணை பதிவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் கூட்டுறவுத்துறை பதிவாளர் சுப்பையன்.