ரூ. 6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

ரூ. 6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

Published on

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஈர்க்கப்பட்ட மொத்த முதலீடுகள் ரூ. 6.64 லட்சம் கோடி என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள சென்னை வர்த்தக மையத்தில் கடந்த இரு நாள்களாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த தொழில் நிறுவனங்கள், இந்தியாவிலுள்ள முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளன. இந்த மாநாட்டின் மூலம் ரூ. 5 லட்சம் கோடி அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட வேண்டும் என தமிழக அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது.

இரு நாள்களாக நடைபெற்று வந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு சற்று முன்னதாக நிறைவடைந்தது. இதன் நிறைவு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் ஈர்க்கப்பட்ட மொத்த முதலீடுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

நிறைவு விழாவில் முதல்வர் பேசியதாவது:

"உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலாக அமையும். தமிழ்நாட்டின் வரலாற்றில் இது நிச்சயம் நினைவுகூரப்படும். இதன் தனித்துவம் மற்றும் புதுமைத்துவம் குறித்து என்றென்றும் பேசப்படும்.

உலக அளவில் முதலீட்டுக்கான சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை முன்னேற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு அன்புக் கட்டளையிட்டேன்.

இந்த மாநாட்டை நடத்துவதற்கான முக்கியக் காரணமாக அது இருக்க வேண்டும் என்றேன்.

எங்களுடைய அயராத உழைப்பு மற்றும் உங்களுடைய பங்களிப்பு காரணமாக, இந்த மாநாட்டின்போது இறுதிசெய்யப்பட்ட மொத்த முதலீடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவில் ரூ. 6,64,180 கோடி. இந்தியாவே உற்று நோக்கும் இந்த அவையில் பெரு மகிழ்ச்சியோடு அறிவிக்கிறோம். இந்தத் திட்டங்கள் மூலம் நேரடி வேலைவாய்ப்பில் 14,54,712 நபர்களுக்கும், மறைமுக வேலைவாய்ப்பு என்கிற வகையில் 12,35,945 நபர்களுக்கும் என மொத்தம் 26,90,657 வேலைவாயப்புகள் உருவாக்கப்படும்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த தொழில் துறை அமைச்சர் தலைமையில் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்படும். அதில் தொழில் துறை அலுவலர்கள், வழிகாட்டுவதற்கான (Guidance) அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்பார்கள். ஒவ்வொரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் தொடர்ந்து கண்காணித்து, அதை ஒரு முழுமையான தொழிற்சாலையாக மாற்றுவதற்கு, அவர்கள் எல்லா முயற்சிகளையும் எடுப்பார்கள்" என்றார் அவர்.

logo
Kizhakku News
kizhakkunews.in