வெள்ளப் பாதிப்பு நிதி: மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

வெள்ளப் பாதிப்பு நிதி: மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

வேலூரில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளதாகத் தெரிவித்தார்.
Published on

தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளுக்காக இடைக்கால நிதியாக ரூ. 2,000 கோடியை உடனடியாக விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழ்நாடு கடந்த டிசம்பரில் இரு பெரிய பேரிடர்களை எதிர்கொண்டது. டிசம்பர் முதல் வாரத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழையானது சுமார் 24 மணி நேரம் இடைவிடாது கொட்டித்தீர்த்தது. இதனால், சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான பகுதிகளில் வெள்ள நீரில் மூழ்கின.

இதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 17, 18 ஆகிய நாள்களில் பெய்த கனமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. விவசாய நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கி சேதமடைந்தன. தென்காசி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் பெய்த கனமழையால் அறுவடைக்குத் தயாராகி வந்த விவசாய நிலங்கள் சேதமடைந்தன.

இரு பெரிய பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6,000 வெள்ள நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டன.

தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிப்படைந்த 2.60 லட்சம் விவசாயிகளுக்கு, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 201.67 கோடி நிவாரண நிதி ஒதுக்கிட அரசாணை வெளியிடப்பட்டது. விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இந்த நிதி நேரடியாக வரவு வைக்கப்படவுள்ளது.

இந்த இரு பெரிய பேரிடர்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக ரூ. 37,907 கோடியை உடனே வழங்க வேண்டும் என்று தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து கோரிக்கை வைத்தார்கள்.

வெள்ள நிவாரண நிதி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்த நிலையில், வெள்ள பேரிடர் மீட்பு நிவாரணத்துக்கு இடைக்கால நிதியாக ரூ. 2,000 கோடியை உடனடியாக விடுவிக்க, மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

முன்னதாக, வேலூரில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், வெள்ள நிவாரண நிதி விடுவிக்கப்படாதது குறித்து மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளதாகத் தெரிவித்தார்.

logo
Kizhakku News
kizhakkunews.in