தமிழ்நாட்டு மாணவர்கள் படிக்கத் தடையாக பசியோ, நீட் தேர்வோ..: முதல்வர் ஸ்டாலின்

இந்தத் திட்டம் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கிறது, பெற்றோர்களின் பொருளாதார சுமையை குறைக்கிறது, பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது
தமிழ்நாட்டு மாணவர்கள் படிக்கத் தடையாக பசியோ, நீட் தேர்வோ..: முதல்வர் ஸ்டாலின்
1 min read

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெரும் துவக்கப்பள்ளியில் இன்று (ஜூலை 15), முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை திட்டத்தைத் தொடங்கி வைத்தார் ஸ்டாலின். திட்டத்தைத் தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையின் சுருக்கம்:

`மிகவும் மகிழ்ச்சியுடன் உங்கள் முன்னால் நிற்கின்றேன். என் மகிழ்ச்சிக்குக் காரணம் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், புதுமைப் பெண், கலைஞர் உரிமைத் திட்டம் என்று தமிழ்நாட்டில் இருக்கும் பெண்கள், மாணவர்கள், குழந்தைகள், இளைஞர்கள் ஆகியோரின் முன்னேற்றத்துக்கும், எதிர்காலத்துக்கும் முதலமைச்சராக இருந்து பணியாற்றக்கூடிய வாய்ப்பு.

இந்த மகிழ்ச்சியை வழங்கிய தமிழ்நாட்டு மக்கள் உங்களுக்கு நன்றி. பள்ளிக்கு வரக்கூடிய குழந்தைகளின் பசியைப் போக்க முடிவு செய்து உருவாக்கிய திட்டம்தான் இந்த காலை உணவுத் திட்டம். சென்னையில் ஒரு பள்ளி விழாவுக்குச் சென்றபோது ஒரு குழந்தை இன்னும் காலை உணவு சாப்பிடவில்லை என்ற சொன்னபோது பெற்றோருக்கே உரிய பாச உணர்வோடு நான் உருவாக்கிய திட்டம்தான் இந்த காலை உணவுத் திட்டம்.

அரசாங்கத்துக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஒரு குழந்தைகூட பசியோடு பள்ளிக்கு வந்து தவிக்கக்கூடாது என்று இந்தத் திட்டத்தைத் தொடங்க உத்தரவிட்டேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேரறிஞர் அண்ணா பிறந்தநாளின்போது இந்தத் திட்டத்தைத் தொடங்கினேன். இன்று பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளின்போது இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தியிருக்கிறேன்.

மொத்தமாக நாள்தோறும் 20 லட்சத்து 73 ஆயிரத்துக்கும் அதிகமான குழ்ந்தைகள் சத்தான காலை உணவை சாப்பிடுகிறார்கள். புறநானூறு, திருக்குறள், மணிமேகலை என்று நம் இலக்கியங்கள் மட்டுமல்ல, அவ்வையார், வல்லளார் போன்ற சான்றோர்களும் பசிப்பிணி நீக்குவது குறித்து உயர்வாக பேசியிருக்கிறார்கள். சங்க காலத்தைச் சேர்ந்த ஒரு மன்னர் ஏழை எளிய மக்களின் பசியைப் போக்கியதால் பசிப்பிணி மருத்துவன் என்று போற்றப்பட்டார்.

ஏழை எளிய மாணவர்களுக்கு உணவளிப்பது மூலமாக குழந்தைகளுக்கு நலமான வளமான அறிவுமிக்க சமூகமாக வளர்த்திருக்கிறோம். ஏனென்றால் குழந்தைகள்தான் தமிழ்நாட்டின் வருங்கால சொத்து. இந்தத் திட்டம் மாணவ-மாணவியருக்கு தன்னம்பிக்கை அளிக்கிறது, பெற்றோர்களின் பொருளாதார சுமையை குறைக்கிறது, பள்ளிக்கு வரும் மாணவ-மாணவியரின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது, இடைநிற்றலைக் குறைத்துள்ளது.

திராவிட மாடல் அரசையும், என்னையும் பொறுத்தவரை நம் தமிழ்நாட்டு மக்கள் படிக்க எதுவும் தடையாக இருக்கக்கூடாது. அது பசியாக இருந்தாலும் சரி, நீட் தேர்வாக இருந்தாலும் சரி அதை உடைப்பதுதான் எங்கள் முதல் பணி. நீட் தேர்வை நான் எதிர்த்தபோது ஏன் எதிர்க்கிறீர்கள் என்று சிலர் கேட்டார்கள். ஆனால் இன்று நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளைப் பார்த்து உச்சநீதிமன்றமே கேள்வி கேட்கிறது. ஒட்டு மொத்த இந்தியாவும் தமிழ்நாட்டின் வழியில் நீட் தேர்வை எதிர்க்கிறது’.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in