
ராமேஸ்வரம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்காததற்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய பாலத்தைத் திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இலங்கையிலிருந்து இன்று தில்லி வந்தார். பாம்பன் புதிய பாலத்தைத் திறந்து வைத்து, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தமிழகம் வந்த பிரதமர் மோடியை மத்திய இணையமைச்சர் எல். முருகன், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, ராமநாதபுரம் ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.கே. வாசன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், சரத்குமார், ஹெச் ராஜா உள்ளிட்டோர் வரவேற்றார்கள். ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் உள்ளிட்டோரும் பிரதமர் மோடியை வரவேற்றார்கள்.
ராமேஸ்வரத்திலிருந்து மதுரை சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
பிரதமர் மோடி தில்லிக்குச் சென்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:
"ரூ. 8,300 கோடி மதிப்புடைய நிறைவடைந்த பணிகளை தமிழக மக்களுக்கு அர்ப்பணித்துள்ளார் பிரதமர் மோடி. சில பணிகளுக்குத் தொடக்க விழா நடத்தியுள்ளார். ராம நவமி நாளன்று பாம்பன் பாலம் திறப்பு விழாவைச் சிறப்பாக நடத்தியுள்ளார்கள்.
பிரதமர் மோடி சற்று முன்னதாக மதுரை விமான நிலையத்திலிருந்து தில்லிக்குக் கிளம்பியுள்ளார். நீண்ட நாள்களுக்குப் பிறகு பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் பங்கேற்காதது எங்களுக்கு வருத்தம். அதற்கு முதல்வர் சொல்லும் காரணம்கூட ஏற்புடையதாக இல்லை. பிரதமர் வருகிறார் என்பது தெரியும். பிப்ரவரியிலிருந்தே பாம்பன் பாலத் திறப்பு விழாவுக்கு நாள் குறித்து வருகிறார்கள், மாநில அரசிடம் பேசி வருகிறார்கள் என்பது தெரியும்.
நமக்காக ரூ. 8,300 கோடி மதிப்புடையத் திட்டங்களைக் கொடுப்பதற்காக பிரதமர் இலங்கையிலிருந்து நேரடியாகத் தில்லி செல்லாமல் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார். அப்படி இருக்கும்போது, பிரதமரை வரவேற்க வேண்டியது மாநிலத்தில் நம் பிரதிநிதியாக இருக்கக்கூடிய முதல்வரின் தலையாயக் கடமை.
முதல்வர் இதில் அரசியல் செய்துள்ளார். ராமேஸ்வரத்தில் வெயில் அதிகம் இருப்பதால் ஊட்டிக்குச் சென்றுவிட்டார். ராமேஸ்வரத்தில் வெயில் 40 டிகிரி. முதல்வருக்கு வெயிலைப் பொறுத்துக்கொள்ள முடியாது என நினைக்கிறேன். எனவே ஊட்டிக்குச் சென்றுள்ளார்.
பாஜக இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். முதல்வர் தன்னுடையக் கடமையைச் செய்யத் தவறிவிட்டார். பிரதமருக்கு அவர் அந்த மரியாதையைக் கொடுத்திருக்க வேண்டும். நம் தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர், தமிழக மக்களுக்கானப் பணிகளைச் செய்ய வந்த பிரதமரை நம் முதல்வர் அவமானப்படுத்தியுள்ளார். இதற்கு தமிழக முதல்வர் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
தொகுதி மறுசீரமைப்பு குறித்து பிரதமர் பேச வேண்டும் என ஊட்டியிலிருந்தபடி முதல்வர் பேசுகிறார். அவர் நடத்தக்கூடிய தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் என்பது நாடகம் என்பதை மக்கள் முழுமையாக உணர்ந்துவிட்டார்கள். தொகுதி மறுசீரமைப்பு பற்றி எப்போது அறிவிக்கிறார்களோ, பாஜக சொல்வதைப்போல எந்த மாநிலத்துக்கும் ஏற்றமும் இறக்கம் இருக்காது என்பது தெரியும். ப்ரோ ரேட்டா அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு இருக்கும்.
மாநில நலன் மீது அக்கறை இருந்தால் முதல்வர் இன்று வந்திருக்க வேண்டும், வரவில்லை. அடுத்தமுறை இந்தத் தவறைச் செய்யாமல் மாநில நலனுக்கு முதல்வரும் துணை இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கிறோம்" என்றார் அண்ணாமலை.