ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழக சட்டமன்ற மரபைப் பின்பற்றவேண்டும்: தவெக தலைவர் விஜய்

சட்டமன்றக் கூட்டத்தொடர் நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நேரலை ஒளிபரப்பை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழக சட்டமன்ற மரபைப் பின்பற்றவேண்டும்: தவெக தலைவர் விஜய்
1 min read

நடப்பாண்டிற்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று (ஜன.6) தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று கூறி பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி.

இதனைத் தொடர்ந்து, ஆளுநர் உரைக்குப் பிறகு தேசிய கீதம் இசைக்கப்படுவது மரபாகப் பின்பற்றப்படுவதாக, இது தொடர்பாக விளக்கமளித்தது தமிழக அரசு. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை பினவருமாறு,

`தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது தமிழக சட்டமன்றத்தின் ஆண்டாண்டு கால மரபு. பொன்விழா கண்ட தமிழக சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும். மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழக சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும் பொழுதும், மரபு சார்ந்த செயல்பாடுகளில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவாவது தொடர்கதையாகி வருகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, இந்தப் போக்கு கைவிடப்பட வேண்டும். மக்கள் பிரச்சனைகள் குறித்தான விவாதங்களே இடம் பெற வேண்டும்.

ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், அதன் நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நேரலை ஒளிபரப்பை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

சட்டமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஜனநாயக முறையில் நடைபெறும் விவாதங்களை, வெளிப்படையாகத் தமிழக மக்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும். எனவே சட்டமன்ற நிகழ்ச்சிகள் முழுவதையுமே எந்தவித இடையூறும் இல்லாமல் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in