
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் வரும் டிசம்பர் 9-ல் தொடங்குகிறது என சபாநாயகர் அப்பாவு இன்று சென்னையில் அறிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள தமிழக சட்டப்பேரவை செயலகத்தில் இன்று (நவ.25) செய்தியாளர்களைச் சந்தித்தார் சபாநாயகர் அப்பாவு. அவர் பேசியவை பின்வருமாறு,
`தமிழ்நாடு சட்டசபை விதியின்படி தமிழக சட்டசபை கூட்டம் வரும் டிசம்பர் மாதம் 9-ம் தேதி காலை 9.30 மணிக்கு தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டசபை மண்டபத்தில் கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவெடுக்கும்’ என்றார்.
அதன்பிறகு சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து சபாநாயகர் அப்பாவு பேசியவை பினவருமாறு,
`சட்டமன்ற கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்யும். அலுவல் ஆய்வுக் குழுவில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் உள்ளனர். சட்டமன்ற நிகழ்வுகள் ஏற்கனவே நேரலை செய்யப்படுகின்றன. கூட்டத்தொடரை முழுமையாக நேரலை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழக முதல்வர் ஸ்டாலினின் வருகைக்குப் பிறகுதான், நேரலை ஒளிபரப்பு ஆரம்பிக்கப்பட்டது. வெளிநாடு சுற்றுபயணத்திபோது காமன்வெல்த் நாடாளுமன்ற அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்றேன். அங்கு ஏ.ஐ. தொழில்நுட்பம் தொடர்பாக பேசும் வாய்ப்பு கிடைத்தது.
தமிழகம் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் முதன்மை மாநிலமாக உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் புதிய தொழில்நுட்பம் குறித்து படிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக சட்டசபையில் காகிதமில்லா முறைதான் உள்ளது’ என்றார்.