
திமுகவை எதிர்ப்பதில் மட்டும் விஜய் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் களம் காணும் தவெக தலைவர் சனிக்கிழமைகளில் மக்களைச் சந்தித்துத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதன் 3-ம் கட்டமாக இன்று நாமக்கல் மற்றும் கரூரில் பரப்புரை நிகழ்த்துகிறார். இந்நிலையில், விஜய் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் தெலங்கானா ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது:-
“நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். விஜய்க்கு தற்போது வரும் கூட்டம் நெறிப்படுத்தப்பட்டுள்ளது. முன்பு நடந்த நிகழ்ச்சிகளில் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்தது. மயக்கமடைய நேர்ந்தது. காவல்துறை அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. என்னைப் பொறுத்தளவில், விஜய் திமுகவை மிகத் தீவிரமாக அம்பலப்படுத்தி வருகிறார். இது சட்டமன்றத் தேர்தல், இது அரசாங்க மாற்றத்திற்கான தேர்தல் என்பதால் அவர் திமுகவைத் தீவிரமாக எதிர்க்கட்டும். மக்கள் ஆட்சிக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். அரசாங்கத்தில் மாற்றம் வர வேண்டும். எனவே, விஜய் திமுகவை எதிர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்”
இவ்வாறு பேசினார்.