அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 23 தொகுதிகள்?: தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் | NDA |

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எம்ஜிஆரின் ஆசீர்வாதம் உண்டு...
தமிழிசை சௌந்தரராஜன் (கோப்புப்படம்)
தமிழிசை சௌந்தரராஜன் (கோப்புப்படம்)
2 min read

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியாகப் போட்டியிடுகின்றன. இதற்கிடையில் தமிழ்நாட்டுக்கான பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று (டிச. 23) சென்னை வருகை தந்தார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தல் வியூகங்கள், பிரசார திட்டங்கள், தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாஜகவுக்கு 23 தொகுதிகள்?

இதையடுத்து தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாக செய்திகள் பரவின. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இது தொடர்பாக பதிலளித்துள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் நினைவு தினத்தை ஒட்டி புதுச்சேரி மற்றும் தெலங்கானாவின் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

“கட்சி பாகுபாடு இல்லாமல் கொள்கை வேறுபாடு இல்லாமல் எம்ஜிஆரை வணங்குபவள் நான். ராஜ்பவனுக்குள் இல்லாமல் மக்கள் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டவர் எம்ஜிஆர். அவர் இருந்த வரை திமுக எந்த வகையிலும் வெற்றி பெற முடியாத சூழல்தான் நிலவியது. எம்ஜிஆர் ஆசீர்வதித்த கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் உழைத்து கொண்டிருக்கிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எம்ஜிஆரின் ஆசீர்வாதம் உறுதியாக இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

எம்ஜிஆரின் ஆசீர்வாதம்

மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாளாக உயர்த்தியதை எதிர்த்து போராடுவதாகக் கூறும் திமுக அரசு, வேலை உத்தரவாதம் கோரி போராடும் செவிலியர்களையும் துப்புரவுத் தொழிலாளர்களையும் குண்டுக்கட்டாகத் தூக்கிக் கைது செய்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். திமுகவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் கனவு. அதை எப்படி நிறைவேற்றுவது என்ற எண்ணத்துடன் கூட்டணி அமைத்திருக்கிறோம். திமுக வீட்டுக்குச் செல்ல வேண்டும். அதற்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என்பதே எனது கருத்து.

200 தொகுதிகளுக்கு மேல்...

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக வெளிவரும் செய்திகள் எல்லாம் காற்றில் பறந்து வரும் வதந்திகள். அவை உண்மை இல்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகுதான் கூட்டணி பற்றி எதையும் சொல்ல முடியும். 200 தொகுதிகளுக்கு மேல் தேசிய ஜனநாயக் கூட்டணி வெற்றி பெறும் என்பதே என் நம்பிக்கை. அதில் எத்தனை தொகுதியில் பாஜக வெற்றி பெறும், எத்தனை தொகுதியில் அதிமுக வெற்றி பெறும் என்று எல்லாம் நாங்கள் பார்க்கவில்லை. திமுகவைப் பொறுத்தவரை அவர்களுக்கு உண்டியல் வேண்டும். ஆண்டவர் வேண்டாம் என்றுதானே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.” என்றார்.

Summary

Former Governor Tamilisai Soundararajan has responded to the question of whether the BJP has been allocated 23 seats in the AIADMK alliance.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in