
பாமக தலைவர் ராமதாஸ் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு,தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இன்று (நவ.25) சென்னை துரைப்பாக்கத்தை அடுத்து உள்ள கண்ணகி நகரில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கட்டப்பட்ட, மாற்றுத்திறனாளிகளுக்கான விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தைத் திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின். அதன்பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, அதானி விவகாரம் குறித்து பாமக தலைவர் ராமதாஸ் எழுப்பிய கேள்வி குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஸ்டாலின், `அவருக்கு வேறு வேலை இல்லை அதனால் தினமும் அறிக்கை விடுகிறார், அதற்கு பதில் அளிக்க வேண்டிய இல்லை’ என்றார்.
மு.க. ஸ்டாலின் கருத்து தொடர்பாக தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ள பாஜக மூத்த தலைவர் தமிழசை சௌந்தரராஜன், `மக்கள் நலனில் அக்கறை கொண்டு எந்தக் கட்சித் தலைவர் கருத்து சொன்னாலும் அதை மதிக்க வேண்டும். ஆட்சியில் இருக்கிறோம் என்று ஆணவம் வேண்டாம். அதுவும் ராமதாஸ் போன்ற அனுபவமிக்க தலைவர்களின் கருத்தை வழிகாட்டுதலாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர பழி சொல்வதாக எடுத்துக் கூடாது.
2026-ல் யாருக்கு வேலை இருக்கப் போகிறது யாருக்கு வேலை இல்லாமல் போகப் போகிறது என்பதை உணர்த்தும். யாருக்கும் நிரந்தரமாக வேலை இருக்கப் போவதில்லை யாரும் நிரந்தரமாக வேலை இல்லாமல் இருக்கப் போவதில்லை.’ என்றார்
முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்து தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, `அதானி நிறுவனத்துடன் திமுக அரசுக்கும், குடும்பத்தினருக்கும் தொடர்பு என்ற செய்திகள் வெளிவந்ததும் அதனை மறைக்கும் முயற்சிகளில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து, மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான ஐயா ராமதாஸ் கேள்வி எழுப்பியதற்கு, தரக்குறைவான முறையில் முதல்வர் ஸ்டாலின் பதிலளித்திருப்பது கண்டிக்கத்தக்கது. அரசியலில் திமுகவின் இரட்டை வேடத்தைக் கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு.
ஐயா ராமதாஸ் அவர்கள் கேட்டிருக்கும் கேள்வியின் உண்மையை எதிர்கொள்ள இயலாமல், இது போன்ற முற்றிலும் ஏற்கத் தகாத முறையில் பதிலளித்திருப்பது, முதலமைச்சரின் இயலாமையைத்தான் காட்டுகிறது. அவர் வகிக்கும் தமிழக முதலமைச்சர் பதவிக்கு அது அழகல்ல என்பதை நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்’ என்றார்.