புதுமைப் பெண் திட்டம் போல விரைவில் தமிழ்ப் புதல்வன் திட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!

`உங்களைத் தேடி’, `உங்கள் ஊரில்’, `நீங்கள் நலமா’ போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
புதுமைப் பெண் திட்டம் போல விரைவில் தமிழ்ப் புதல்வன் திட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை உட்பட 14 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். அரசுத் திட்டங்களின் நிலை, புதிய அரசுத் திட்டங்கள் அறிவிப்பு உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வாரியாக நடைபெறும் பணிகள் குறித்து ஆட்சியர்களிடம் கேட்டறிந்த முதல்வர், சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியாக இருக்கும் புதிய அறிவிப்புகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

`அடுத்த இரண்டாண்டுகள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் மிகவும் முக்கியமான ஆண்டுகள். மக்கள் நலப்பணிகளை செய்ய வேண்டிய கடமைகள் நமக்கு இருக்கிறது’ என மாவட்ட ஆட்சியர்களிடம் உரையாற்றினார் ஸ்டாலின்.

`ஒரு சிறந்த நல்லாட்சியை வழங்க, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, சமூகநலத் திட்டங்களைச் செயல்படுத்துதல், கட்டமைப்பை மேம்படுத்தி வேலை வாய்ப்பை உருவாக்குதல், பொது மக்களுக்கு அரசு சேவைகள் கிடைப்பதை உறுதி செய்தல்’ போன்ற இந்த நான்கு விஷயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும்' என ஆட்சியர்களிடம் உரையாற்றினார் ஸ்டாலின்.

`மக்களுடன் முதலமைச்சர் திட்டம் வரும் ஜூலை முதல் செப்டம்பர் வரை ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. `உங்களைத் தேடி’, `உங்கள் ஊரில்’, `நீங்கள் நலமா’ போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளது. அனைத்து பள்ளிக் குழந்தைகளும் கல்லூரியில் படிக்கும் வகையில் `கல்லூரிக் கனவு திட்டம்’, `உயர்வுக்குப் படி’ போன்றத் திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன’ என இந்தக் கூட்டத்தில் அறிவித்தார் முதல்வர்.

`பெண் மாணவர்களுக்கான `புதுமைப் பெண் திட்டம்’ போல, ஆண் மாணவர்களுக்கான `தமிழ்ப் புதல்வன் திட்டம்’ விரைவில் நடைமுறைக்கு வருகிறது' என்றார் முதல்வர்.

`பருவமழை தொடங்க இருப்பதால், அதற்கு முன்பு அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்’, `போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிப்பதில் ஆட்சியர்கள் மும்முரம் காட்ட வேண்டும்' எனவும் இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in