
மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை நிதி கிடையாது என்ற மிரட்டல் விடுக்கும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு நிதி விடுவிக்கப்படாமல் இருப்பது நீண்ட நாள் பிரச்னையாக இருந்து வருகிறது. இதனிடையே உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ்ச் சங்கமம் தொடக்க விழாவில் கலந்துகொண்ட மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக் கொள்கையை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் வரை சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு நிதி விடுவிக்கப்படாது என்று கூறினார்.
"மத்திய அரசின் நிபந்தனைகளுக்கு தமிழ்நாடு அரசு முதலில் ஒப்புக்கொண்டது, பிறகு பின்வாங்கிவிட்டது. அவர்கள் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்கள். அரசியலமைப்புக்குக் கட்டுப்பட்டு இயங்க வேண்டும். அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டவர்களாக நினைத்துக் கொள்ளக் கூடாது. தேசிய கல்விக் கொள்கையை அவர் ஏற்றுக்கொண்டாக வேண்டும்" என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தர்மேந்திர பிரதான் கூறினார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் இந்தப் பேச்சுக்குத் தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் கிளம்பின.
தர்மேந்திர பிரதானின் காணொளியைப் பகிர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளப் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
"இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு இணங்க வேண்டும் என்கிறார் ஒன்றியக் கல்வி அமைச்சர். மும்மொழிக் கொள்கையை சட்டவிதி என்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா?
மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம்! ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி! அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல! "மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது" என்று மிரட்டல் விடுக்கும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்!
எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்...." என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.