காவிரிப் பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்: துரைமுருகன்

கர்நாடகத்தில் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும் என்பதால், தற்போதைய நிலையில் தண்ணீரைத் திறக்க முடியாது என கர்நாடக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அமைச்சர் துரைமுருகன் (கோப்புப்படம்)
அமைச்சர் துரைமுருகன் (கோப்புப்படம்)ANI

காவிரி நீர் பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என தமிழ்நாட்டு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் தில்லியில் வினீத் குப்தா தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி, கர்நாடகத்திலிருந்து திறந்துவிடப்பட வேண்டிய நிலுவையில் இருக்கும் தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என தமிழ்நாடு தரப்பில் கோரப்பட்டது.

கர்நாடகத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பைக் கணக்கிட்டு, தமிழ்நாட்டுக்கு மே மாதம் வழங்க வேண்டிய 25 டிஎம்சி தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான 2.5 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் எனக் கோரப்பட்டது.

தமிழ்நாட்டுக்குத் தண்ணீரைத் திறந்துவிட்டால், கர்நாடகத்தில் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும் என்பதால், தற்போதைய நிலையில் தண்ணீரைத் திறக்க முடியாது என கர்நாடக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக விவாதம் நடைபெற, காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் வினீத் குப்தாவும், மே 2-வது வாரத்துக்குப் பிறகு தமிழ்நாட்டின் கோரிக்கை குறித்து ஆராயலாம் என்று தெரிவித்து கூட்டத்தை ஒத்திவைத்தார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கர்நாடக அரசின் நிலைப்பாடு குறித்து பேசியதாவது:

"தண்ணீரைத் திறந்துவிடுவோம் என்று கர்நாடக அரசு என்றைக்கு சொல்லியிருக்கிறது. அதிகமாக தண்ணீர் இருந்தாலும் அவர்களுக்கு இதே பேச்சுதான், குறைவாக தண்ணீர் இருந்தாலும் இதே பேச்சுதான். தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை வாரியம் கூறிய பிறகும், திறக்க மாட்டோம் என்கிறார்கள். கர்நாடக அரசு, மத்திய அரசை மதிக்காமல் இருக்கிறது. இந்த விவகாரத்தில் கேள்வி கேட்க வேண்டியது உச்ச நீதிமன்றம். நாங்கள் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்" என்றார் துரைமுருகன்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in