
தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் நாளை (மே 23) முதல் அடுத்த 10 நாள்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.
தன் முகநூல் கணக்கில் இன்று (மே 22) வெளியிட்ட பதவில் அவர் கூறியதாவது,
`மேற்கு கடற்கரை / மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்கியதோடு, மிக கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் விடுமுறையைப் பாதுகாப்பாக திட்டமிடுங்கள், அதிகமாக மழை பெய்யும் பகுதிகளுக்குப் பயணிப்பதை தவிர்க்கவும்.
மே 23 முதல் ஜூன் 3 வரையிலான 10 நாட்களுக்கு கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு (கோயமுத்தூர் - வால்பாறை, நீலகிரி - கூடலூர், கன்னியாகுமரி) பகுதிகளில் மிக கனமழையை எதிர்பார்க்கலாம். சில இடங்களில் மேற்கூறிய நாட்களில் 24 மணிநேரத்தில் 200 மி.மீ.க்கும் (அதீத மழை) அதிகமாக மழை பெய்யக்கூடும்.
பொதுவாக இந்த பருவமழை ஜூன் மாதத்தில் ஏற்படும், ஆனால் இரட்டை அமைப்புகள் (அரேபிய கடலில் ஒன்று மற்றும் வங்காள விரிகுடாவில் ஒன்று) இருப்பதால், மலைத்தொடர் பகுதிகள் தீவிர மழைக்கு ஏற்றதாக இருக்கும்.
இது விடுமுறை காலம் என்பதால் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள மலை வஸ்தலங்களுக்குச் செல்லும்போது, அதிலும் குறிப்பாக அதிக மழை பெய்த பிறகு, சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இடுக்கி, குடகு, வயநாடு, நீலகிரியில் உள்ள கூடலூர்-அவலாஞ்சி பெல்ட், வால்பாறை, சிக்மகளூர் மலைப்பகுதி, கர்நாடக கடலோரப் பகுதிகள், உடுப்பி, ஷிமோகா மலைப்பகுதி, உத்தர கன்னடா, வட கடலோர கேரளா போன்றவை ஆபத்தான பகுதிகளாகும்.
கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, சிறுமலை, கொல்லிமலை, மேகமலை பயணங்கள் பாதுகாப்பானவை.
மேற்கு கடற்கரை / மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்து, மறுபுறத்தில் ஒன்றுகூடுவதற்கு இடமில்லாமல் போன பிறகு, சென்னையில் மழைக்கான இடைவேளை இருக்கும். தமிழ்நாட்டின் பிற உட்புறப் பகுதிகளில் நாளை (மே 23) மழை பெய்யும்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மறைந்துவிட்டதால், பெங்களூருவின் மேற்குப் பக்கத்திலிருந்து மேகமூட்டங்களுடன் கூடிய பருவமழை பெய்யும்’ என்றார்.