திமுகவுக்கு ஆதரவான கருத்தா?: தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்

"உண்மைகளுடனும் தரவுகளுடனும் எனக்குச் சவால் விடுங்கள். எந்தவொரு தளத்திலும் சவாலை ஏற்க நான் தயார்."
திமுகவுக்கு ஆதரவான கருத்தா?: தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்
படம்: https://x.com/praddy06
2 min read

வானிலை கணிப்பு தொடர்புடைய பதிவுகள் குறித்து சிலர் விமர்சித்து வரும் நிலையில், தான் எந்தவொரு தரப்பையும் சார்ந்தவன் அல்ல என்று தமிழ்நாடு வெதர்மேன் விளக்கமளித்துள்ளார்.

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டிருந்தது. இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வமாக அறிவித்தாலும் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் (தமிழ்நாடு வெதர்மேன்) வழக்கம்போல அவ்வப்போது தனது கணிப்புகளை சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்து வந்தார்.

ஆனால், அனைத்து எச்சரிக்கைகளுக்கு மாறாக அனைவரும் எதிர்பார்த்த அதிகனமழை நேற்றிரவு முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் பெய்யவில்லை. இதனிடையே, அண்மையில் யூடியூப் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் 20 செ.மீ. அளவுக்கு மழை பெய்தால் சாலைகளில் தண்ணீர் தேங்குவது இயல்பானதுதான் என்ற கருத்தை தமிழ்நாடு வெதர்மேன் முன்வைத்திருந்தார்.

இதைக் கொண்டு திமுக அரசுக்கு ஆதரவான கருத்துகளை தமிழ்நாடு வெதர்மேன் முன்வைப்பதாக சமூக ஊடகங்களில் சில விமர்சனங்களைப் பதிவிட்டு வந்தார்கள். இவற்றுக்குப் பதிலளிக்கும் விதமாக தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் கொடுத்துள்ளார்.

"வானிலை ஆய்வு மையத்தின் பார்வைகளுடன் முரண்படக் கூடாது என்று நான் விரும்பினாலும், உரிய மரியாதையுடன் இதைக் கூறுகிறேன். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்னும் கடலில்தான் உள்ளது என்பதால், எந்த நேரத்திலும் வெப்பச்சலனம் ஏற்படலாம். ஆனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் எந்தவொரு மண்டலத்திலும் அடுத்த 24 மணி நேரத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக நான் பார்க்கவில்லை. மழையின் தீவிரம் நேற்று கடந்துவிட்டது. ஒரே நாளில் 200 மி.மீ. மேல் மழை பெய்வதற்கான சாத்தியமில்லை. அக்டோபர் 17 அன்று மழை பெய்யும். ஆனால் அதிகபட்சம் 50 முதல் 70 மி.மீ. வரையிலான சாதாரண மழையாக தான் அது இருக்கும். ஓரிரு இடங்களில் வேண்டுமானால் கூடுதல் மழை பெய்யலாம்.

இதை சாதாரண மழை என்று யாரும் நினைத்தால், இது சாதாரண மழை கிடையாது. 24 மணி நேரத்தில் 75 நிலையங்களில் 200 மி.மீ. மேல் மழை பெய்துள்ளது. காலை 8.30 மணிக்குள் மழையின் அளவைப் பதிவு செய்வதால், இரு நாள் கணக்காக மழையின் அளவு பதிவாகியுள்ளது. மழை பெய்ததைப் பொறுத்து பார்க்கும்போது, இது 24 மணி நேரத்துக்குள் பெய்த மழை. எதிர்பார்த்த மழை தொடர்ந்திருந்தால், நிச்சயமாக இது மோசமானதாக மாறியிருக்கும். இந்த எண்ணிக்கையை எந்தவொரு வானிலை ஆய்வாளரிடம் வேண்டுமானாலும் காண்பித்து இது சாதாரண மழையா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

இயற்கையை யாராலும் கணிக்க முடியாது என்ற வசனங்கள் சரிதான் என்றாலும், வேறு என்ன செய்யலாம்?. இயற்கை வந்தால், யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டு, எந்தவொரு எச்சரிக்கையையும் விடுக்காமல் இருந்துவிட முடியுமா?. இது வானிலை ஆர்வலர்களின் வெற்றி தோல்வி குறித்து கிடையாது. நான் ஒரு மனிதாக என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய முயற்சிக்கிறேன். வின்டி செயலியைப் பார்த்து வானிலையைக் கணித்துவிடலாம் என்று பலர் நினைக்கிறார்கள். அந்த அளவுக்கு அது எளிது என்றால், ஒரு வானிலைப் பக்கத்தைத் தொடங்கி சேவையாற்றுங்கள்.

நான் எந்தவொரு பக்கத்தையும் சார்ந்து செயல்படவில்லை. நான், யாரையும் குளிர்விக்க வேண்டும் என்று நினைப்பவனும் அல்ல. அப்படியென்றால், எதற்கான நான் இப்படி உண்மைத் தரவுகளை வெளியிட வேண்டும். நான் ஏற்கெனவே கூறியதைதான் மீண்டும் கூறுகிறேன். ஒரு நாளில் 20 செ.மீ. அளவுக்கு மழை பெய்தால் சில மணி நேரங்களுக்குத் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கதான் செய்யும். அதுவும் சென்னை மாதிரியான தட்டையான நகரில் நிச்சயமாகத் தேங்கும்.

ஒரு நாளைக்கு 40 செ.மீ. அளவுக்கு மழை என்றால், அது மிகப் பெரிய மழை. மழைநீர் வடிகால் இந்த இடத்தில் வேலைக்கு ஆவாது. காரணம், நிலப்பரப்பில் தாழ்வான பகுதிகளில் இருக்கும் ஆறுகளிலும் நீரோட்டத்தின் உயரம் அதிகரித்திருக்கும். எனவே, மழைநீர் வடிகாலுக்குள் தான் நீர் திரும்பும். யூடியூப் ஊடகம் (கலாட்டா) ஒன்றில் நான் பேசியது, இந்த மழைக்கு 2-3 வாரங்களுக்கு முன்பு. தற்போதைய மழை தொடர்பாக யாரையும் குளிர்விக்க வேண்டும் என்பதற்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

தயாராக இருக்க வேண்டும் என்று மக்களுக்குத் தெரியபடுத்த வேண்டும், ஒருவேளை யாரேனும் உதவிக்கு வரவில்லை என்றால் இப்படியொரு சூழலை எதிர்கொள்ள நம்மை நாமே தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். இந்தப் பருவத்தின் முதல் நிகழ்வானது முடிந்துவிட்டது. ஆனால், மேற்கொண்டு பல நிகழ்வுகள் வரக் காத்திருக்கின்றன.

உங்களுடையச் சொந்த சமூக ஊடகப் பக்கத்தில் மீம்களை உருவாக்கி, வெறுமென அடையாள முத்திரை குத்துவதற்குப் பதிலாக உண்மைகளுடனும் தரவுகளுடனும் எனக்குச் சவால் விடுங்கள். எந்தவொரு தளத்திலும் சவாலை ஏற்க நான் தயார்" என்று தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in