
திருச்சியைச் சேர்ந்த பழங்குடியின மாணவர் பரத், கிளாட் (CLAT) தேர்வில் முதலிடம் பெற்றுள்ளார். இதன் மூலம், தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில தகுதி பெறும் முதல் பழங்குடியின மாணவர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.
திருச்சி பச்சமலை தோனூர் மலை கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவர் பரத், `பொது சட்ட நுழைவுத் தேர்வு’ என்று அறியப்படும் `கிளாட்’ தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். கிளாட் தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில தகுதிபெறும் முதல் பழங்குடியின மாணவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இது தொடர்பாக சன் நியூஸுக்கு அளித்த பேட்டியில் பரத் கூறியதாவது,
`நான் பச்ச மலையில்தான் படித்தேன். 12-ம் வகுப்பில் 356 மதிப்பெண்கள் எடுத்தேன். கிளாட் தேர்வுக்கு பயிற்சி மேற்கொண்டேன். திருச்சி சட்டக் கல்லூரியில் ஒரு வாரம் தங்கி தேர்வுக்குத் தயாரானேன். தேர்வில் தேர்ச்சி பெற்றதும் திருச்சிக்கு சென்று வகுப்பில் சேர்ந்தேன்.
கல்விக் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று தெரிவித்தார்கள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனது ஆசிரியர் எனக்கு நிறைய ஊக்கமளித்தார். எங்கள் மலையில் யாருமே வழக்கறிஞருக்குப் படித்ததில்லை; நான்தான் முதலில் படிக்கப்போகிறேன். கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு உதவி செய்யவே இந்த படிப்பை தேர்ந்தெடுத்தேன்’ என்றார்.
பரத்துக்கு வாழ்த்து தெரிவித்து தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டு முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, `உள்ளம் உவகையில் நிறைகிறது. தம்பி பரத் சட்டம் பயின்று தன் அறிவொளியை இந்தச் சமூகத்துக்கு வழங்கிடவேண்டும் என வாழ்த்துகிறேன்’ என்றார்.