
தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் வருவாய் ஐந்து மடங்கு உயர்ந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா துறையின் வளர்ச்சி தொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை இன்று (ஆக. 16) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,
`தமிழ்நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 2022-ல் 1.4 லட்சம்; இது 2023-ல் 11.7 லட்சமாக அதிகரித்துள்ளது.
அதேபோல, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 2022-ல் 21.8 கோடி என்பது, 2023-ல் 28.6 கோடியாக அதிகரித்துள்ளது. இந்தப்புள்ளி விவரங்கள் எல்லாம் மக்கள் இடையே சுற்றுலா குறித்து வளர்ந்துள்ள ஆர்வத்தைப் புலப்படுத்துகின்றன.
2024-ம் ஆண்டு உலக சுற்றுலா தினத்தை ஒட்டி மாமல்லபுரம், தஞ்சாவூர், ராமேஸ்வரம், மதுரை, செட்டிநாடு ஆகிய இடங்களுக்கு தமிழ்நாட்டை கண்டு மகிழ்வோம் எனும் சிறப்புச் சுற்றுலா பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் ஜனவரி வரை மாமல்லபுரத்தில் புகழ்பெற்ற இந்திய நாட்டிய விழா நடத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் சுற்றுலா வளர்ச்சிக்கும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பல்வேறு வசதிகளுக்கும் உரிய திட்டங்களை நிறைவேற்றி வரும் தமிழக முதல்வர் தலைமையிலான அரசு பல்வேறு விருதுகளை வென்று புகழ் படைத்து வருகிறது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் கடந்த ஆண்டுகளைவிட 2024-ம் ஆண்டில் ரூ. 28.69 கோடி அதிக வருவாய் ஈட்டி மாபெரும் சாதனை படைத்துள்ளது. 2020-21-ல் ரூ. 49.11 கோடியாக இருந்த தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் வருமானம் 2023-24-ல் ரூ. 243.31 கோடியாக அதிகரித்துள்ளது. இது ஐந்து மடங்கு அதிகமாகும்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் நடத்தப்படும் 26 ஓட்டல்கள் மூலமாகவும், அனைத்து சுற்றுலாக்களையும் ஆன்லைனில் பதிவு செய்யும் சேவைகள் காரணமாகவும் 2021 மே முதல் 2025 ஜனவரி வரை ரூ. 129.28 கோடி வருவாய் ஈட்டி மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.