
நிலுவையில் உள்ள கல்வி நிதியை மத்திய அரசு விடுவிக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.
2020 தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்களில் ஒன்றான மும்மொழிக்கொள்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு மறுத்துவிட்டது. இந்த விவகாரத்தை முன்வைத்து மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவு வருகிறது.
இதன் வெளிப்பாடாக அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ் 2025-26 நிதியாண்டில் தமிழகத்திற்குச் சேரவேண்டிய ரூ. 2,152 கோடி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இதனால் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வந்தது. நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்குமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமருக்குக் கடிதம் எழுதினார்.
இந்நிலையில், நிலுவைத் தொகையை 6% வட்டியுடன் சேர்த்து, ரூ. 2291 கோடியாக விடுவிக்க உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் மனுவில் கூறியதாவது,
` பி.எம். ஸ்ரீ (PM SHRI) திட்டத்துக்கான நிதியை தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒதுக்கவில்லை. தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே இந்த நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு கூறுகிறது. தேசியக் கல்விக் கொள்கை மும்மொழி திட்டத்தைக் கொண்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கை அமலில் உள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் (சமக்ர சிக் ஷா அபியான் - எஸ்.எஸ்.ஏ.) திட்டத்தின் கீழ் நிதி பெறும் மாநிலத்தின் உரிமையை மத்திய அரசு தடுத்துள்ளது. கல்வி நிதியை நிறுத்துவது, கல்வி தொடர்பாக சட்டம் இயற்றுவதற்கான மாநிலத்தின் அரசியலமைப்பு அதிகாரத்தை அபகரிப்பதற்கு சமம்.
தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட வேண்டிய ரூ. 2,152 கோடி வழங்கப்படாததால், இத்திட்டம் செயல்படுத்துவது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மே 1, 2025 முதல் இந்த ஆணை நிறைவேற்றப்படும் தேதி வரை, அசல் தொகையில் ஆண்டுக்கு 6% வட்டியுடன் மத்திய அரசு ரூ. 2291 கோடியை மாநிலத்திற்கு வழங்க உத்தரவிடவேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.