அதிமுகவினரை வெளியேற்றவும்: காவலர்களுக்கு சட்டப்பேரவைத் தலைவர் உத்தரவு

ஆக்கப்பூர்வமான அரசியலைச் செய்ய முன்வாருங்கள். அரசின் மீது ஆக்கப்பூர்வமான குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் - முதல்வர் ஸ்டாலின்
அதிமுகவினரை வெளியேற்றவும்:  காவலர்களுக்கு சட்டப்பேரவைத் தலைவர் உத்தரவு
2 min read

தமிழக சட்டப்பேரவையில், காவலர் கொலை தொடர்பாக விவாதிக்கக் கோரி அமளியில் ஈடுபட்ட அதிமுகவினரை பேரவையிலிருந்து வெளியேற்ற பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவு பிறப்பித்தார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று காலை அவை கூடியது. மதுரை உசிலம்பட்டி காவலர் முத்துக்குமரன் கொலை தொடர்பாக விவாதிக்கக் கோரி அதிமுக சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

சட்டப்பேரவை மரபின்படி முன்கூட்டியே அறிவிப்பு கொடுக்காமல் பேச அனுமதிக்க முடியாது என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பதிலளித்தார். மதுரை காவலர் கொலை குறித்து எடப்பாடி பழனிசாமி பேச முற்பட்டபோது அனுமதி மறுக்கப்பட்டதால், அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டார்கள்.

முந்தைய அதிமுக ஆட்சியில் அப்போதைய சட்டப்பேரவைத் தலைவராக தனபால் இருந்தபோது, முன் அனுமதி பெற்ற பிறகே பேச வேண்டும் என்ற நடைமுறையே தற்போதும் கடைபிடிக்கப்படுவதாக அமைச்சர் எ.வ. வேலு பதிலளித்தார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலுரை ஆற்றியபோது அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டார்கள்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், "பேரவைத் தலைவர் அவர்களே, உங்களிடத்தில் அனுமதி பெற்றுவிட்டு முன்கூட்டியே தெரிவித்துவிட்டு பேச வேண்டும் என்பது தான் மரபு. அவை முன்னவர் தெளிவாக சொல்லியிருக்கிறார். நேரமில்லா நேரமாக இருக்கக்கூடிய பிரச்னையாக இருந்தாலும், குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பு தர வேண்டும் என்பது மரபுபடி கடைபிடிக்கப்படுகிறது. அப்படி கடைபிடித்தால் அனுமதியுங்கள் இல்லையெனில் அனுமதிக்கக் கூடாது.

நீங்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயாராக இருக்கிறேன். தொலைக்காட்சியைப் பார்த்து தெரிந்துகொண்டேன் என்று சொல்லத் தயாராக இல்லை" என்றார்.

மீண்டும் பேசிய முதல்வர் ஸ்டாலின், "தமிழ்நாட்டில் பொது அமைதி நிலவுகிறது. பெரிய சட்டம்-ஒழுங்கு பிரச்னை எதுவுமின்றி மக்கள் அமைதியாக இணக்கமாக வாழ்கிறார்கள். இதனால் தான் தொழில் முதலீடு, புதிய தொழிற்சாலைகள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. இந்தச் சூழலைத் தாங்கிக்கொள்ள முடியாத சில மாநில விரோத சக்திகள், தமிழ் மக்கள் விரோத சக்திகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் கொலை, கொள்ளை போன்ற ஒரு சில நிகழ்வுகளை ஊதிப் பெரிதாக்கி மக்களைப் பீதியில் வைக்க இரவு பகலாக மக்களின் பாதுகாப்புக்காக உழைத்துக் கொண்டிருக்கும் நம் தமிழ்நாட்டுக் காவல் துறைக்கு இழுக்கு ஏற்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்குப் பிரதான எதிர்க்கட்சியும் துணை போகிறது. சில ஊடகங்களும் பத்திரிகைகளும் துணை போகின்றன.

அதிமுக ஆட்சியில் நிகழ்ந்ததைப்போல எந்தக் கலவரமும் இந்த ஆட்சியில் நிகழவில்லை. ஆளுங்கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்குப் போடப்படுகிறது. அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

சில நேரங்களில் நடக்கும் தொடர் சம்பவங்களை வைத்து தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக மக்களைத் திசை திருப்புவதற்காக வீண் புரளிகளைக் கிளப்பாமல் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அவர் கூட்டணி வைக்கத் துடித்துக்கொண்டிருக்கும் கட்சியாக இருந்தாலும் ஆக்கப்பூர்வமான அரசியலைச் செய்ய முன்வாருங்கள். அரசின் மீது ஆக்கப்பூர்வமான குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். அரசியல் செய்வதற்காக தமிழ்நாடு காவல் துறை மற்றும் அமைதியான மாநிலமாக இருக்கும் தமிழ்நாடு எனும் பெயரைக் கெடுப்பதற்குத் துணை போக வேண்டாம்" என்றார் முதல்வர் ஸ்டாலின்.

முதல்வர் ஸ்டாலின் உரையாற்றியபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், அவர்களை சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றுமாறு காவலர்களுக்கு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவு பிறப்பித்தார். அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் பேரவையிலிருந்து வெளியேறிய நிலையில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டும் அவையில் இருந்தார்கள்.

இதைத் தொடர்ந்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலுரையை நிகழ்த்தினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in