
பள்ளிக் குழந்தைகளை மையமாக வைத்து மேற்கொள்ளப்பட்ட தனது முனைவர் பட்ட ஆராய்ச்சி நிறைவுபெற்றுள்ளதை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
தனது எக்ஸ் கணக்கில் இன்று (ஆக. 12) வெளியிட்ட பதிவில் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது,
`அன்புள்ள நண்பர்களே, ஆகஸ்ட் 11-ம் தேதி `இயந்திரக் கற்றல் வழியாக உடல் செயல்பாட்டின் மூலம் திறன் மேம்பாடு’ என்ற தலைப்பில் எனது முனைவர் பட்ட ஆய்வின் சுருக்கத்தை வெற்றிகரமாக வழங்கியதைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நான்கு ஆண்டுகால தீவிர கற்றல், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியின் நிறைவை இது குறிக்கிறது. நேனஷல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் பிரசன்னா பாலாஜியின் வழிகாட்டுதலின் கீழ் பணிபுரியும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது, அவருடைய வழிகாட்டுதல் விலைமதிப்பற்றது.
புகழ்பெற்ற துறை வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களுடனான தொடர்புகளை இந்தப் பயணம் வழங்கியது. அவர்களின் நுண்ணறிவு எனது ஆராய்ச்சியை செம்மைப்படுத்தவும் எனது பார்வையை விரிவுபடுத்தவும் உதவியது.
இயந்திரக் கற்றல் மூலம் மேம்படுத்தப்படும் உடல் செயல்பாடுகள் பள்ளிக் குழந்தைகளில் திறன் வளர்ச்சியை எவ்வாறு அதிகரிக்க முடியும் என்பதை எனது ஆய்வின் மையக்கரு ஆராய்ந்தது. எதிர்கால கற்றல் மாதிரிகளுக்கு தொழில்நுட்பம் மற்றும் உடற்கல்வியை இணைப்பதே இந்த ஆராய்ச்சியின் நோக்கமாகும்.
சக ஊழியர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அளித்த ஆதரவிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த மைல்கல் எனது கல்வி மற்றும் தனிப்பட்ட பயணத்தில் ஒரு பெருமைமிக்க முன்னேற்றமாகும்’ என்றார்.