
நடப்பு நிதியாண்டில் இதுவரை 12.62 பில்லியன் டாலர் மதிப்பிலான மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்து நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
மாநில வாரியாக, நடப்பு நிதியாண்டில் (2024-25) ஏற்றுமதி செய்யப்பட்ட மின்னணு பொருட்களின் மதிப்பு குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி ஏப்ரல் 2024 முதல் பிப்ரவரி 2025 வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக 12.62 பில்லியன் டாலர் மதிப்பிலான மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்து நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
இந்தியாவின் மொத்த மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் இது 37.09 சதவீதமாகும். 6.88 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஏற்றுமதியுடன் இரண்டாவது இடத்தில் கர்நாடகமும், 4.69 பில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்தில் உத்தர பிரதேசமும், 3.23 பில்லியன் டாலர்களுடன் நான்காவது இடத்தில் மஹாராஷ்டிரமும் உள்ளன
இது தொடர்பாக எகனாமிக்ஸ் டைம்ஸ் செய்தி ஊடகத்திற்குப் பேட்டியளித்த தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா,
`தமிழ்நாட்டின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் பிப்ரவரி மாதம் வரை 12.62 பில்லியன் டாலரை எட்டி சாதனை படைத்துள்ளது. தற்போது அதிக மதிப்புள்ள மின்னணு பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலம், மதிப்பு சங்கிலியில் வேகமாக முன்னேறி வருகிறோம்.
உயர்நிலை வேலை வாய்ப்புகளை வழங்கும், மேம்பட்ட தொழில்நுட்பத்தை உபயோகித்து உற்பத்தி மேற்கொள்ளும் தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்’ என்றார்.
நடப்பு மார்ச் மாதத்தின் தொடக்கத்தில், ரூ. 1,112 கோடி செலவில் திருவள்ளூர் மாவட்டம் மணலூரிலும், காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கத்திலும் இரு மின்னணு உற்பத்தி மையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் அறிவித்திருந்தார்.