உடனடி பூரண மதுவிலக்குக்கான சூழல் தற்போது இல்லை: அமைச்சர் முத்துசாமி

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால்..
உடனடி பூரண மதுவிலக்குக்கான சூழல் தற்போது இல்லை: அமைச்சர் முத்துசாமி
1 min read

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது.

விஷச் சாராயம் விற்றால் ரூ. 10 லட்சம் அபராதத்துடன் ஆயுள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் வகையில் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அதிமுக உறுப்பினர்கள் இதுதொடர்பாக விவாதிக்க வேண்டும் எனத் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டார்கள். கடந்த 26 அன்று அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடரில் பங்கேற்கத் தடை விதித்து அவர்களை இடைநீக்கம் செய்து சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டார்.

இந்த நிலையில், காவல் துறை மானியக் கோரிக்கை மீது நேற்று மாலை விவாதம் நடைபெற்றது. பாமக உறுப்பினர் ஜி.கே. மணி, கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்புகள் குறித்து கேள்வியெழுப்பினார்கள். இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், "உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய பொருள்களைக் காய்ச்சுதல், விற்பனை செய்தல் போன்ற குற்றங்களுக்கான தண்டனை போதுமானதாகவும், கடுமையானதாகவும் இல்லை" என்றார். மேலும், இந்தக் குற்றங்களுக்கான தண்டனையைக் கடுமையாக்கி, மதுவிலக்கு சட்டத்தில் திருத்த மசோதா ஒன்று சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்படும் என்றார் அவர்.

இதன்படி, சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று காலை அவை கூடியது. அமைச்சர் முத்துசாமி இந்த மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையுடன் ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் வகையில் மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், கள்ளச்சாராய விற்பனைக்குப் பயன்படுத்தப்படும் அசையா சொத்துகளைப் பறிமுதல் செய்யவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மசோதா மீதான விவாதத்தின்போது, பாமக சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே. மணி பூரண மதுவிலக்கு குறித்து முன்வைத்தார். இதற்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் முத்துசாமி, "பூரண மதுவிலக்கை உடனடியாகக் கொண்டு வர முடியுமா என்பதை உறுப்பினர் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அரசுக்கும் பூரண மதுவிலக்கில் விருப்பம் உள்ளது. ஆனால், அதற்கான சூழல் தற்போது இல்லை. மதுக்கடைகளைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்பதே அரவின் எண்ணம். தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால், அண்டை மாநிலங்களிலிருந்து மது தமிழ்நாட்டுக்குள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது" என்றார்.

விவாதத்தைத் தொடர்ந்து, மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in