
வரும் ஜூலை மாதம் முதல் தமிழகத்தில் 3.16% வரை மின் கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொருளாதாரத்தில் நிலவும் பணவீக்கத்தை அளவிடும் வருடாந்திர நுகர்வோர் விலைக் குறியீட்டை (Consumer Price Index) அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
இதற்கான விதிகளைக் கொண்ட ஆணை கடந்த 2022-ல் வெளியிடப்பட்டது. இதன்படி, 6 சதவீதம் அல்லது ஏப்ரல் மாத பணவீக்க விகிதம் ஆகிய இரண்டில், எது குறைவோக உள்ளதோ அந்த அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும்.
அந்த வகையில், நுகர்வோர் விலைக் குறியீட்டை முன்வைத்து கடந்த 2023 ஜூலையில் 2.18 சதவீதமும், 2024 ஜூலையில் 4.83 சதவீதமும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது, வீடுகளுக்கான மின் கட்டண உயர்வை தமிழக அரசு ஏற்றது.
இந்நிலையில், அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி (All India CPI) ஏப்ரல் 2025-ல் பணவீக்கம் 3.16% ஆக உள்ளது. இதன் அடிப்படையில், வரும் ஜூலையில் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கட்டண உயர்வு வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு அமல்படுத்தப்படும். அதேநேரம் இந்த ஆண்டும் வீடுகளுக்கான மின் கட்டண உயர்வை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது.
2022-ல் அமல்படுத்தப்பட்ட இந்த புதிய கணக்கீட்டு முறையின்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது. 2021-22-ம் நிதியாண்டில் ரூ. 45,953 கோடியாக இருந்த வருவாய், 2022-23-ம் நிதியாண்டில் சுமார் 32% உயர்ந்து ரூ. 60,505.37 கோடியாக அதிகரித்தது. இதை தொடர்ந்து 2023-24 நிதியாண்டில் ரூ. 71,614 கோடியாக அதிகரித்தது.
மேலும், வரி அல்லாத வருவாய் 2021–22-ம் நிதியாண்டில் ரூ. 2,722 கோடியாக இருந்தது. இது 2022-23-ம் நிதியாண்டில் சுமார் 58% அதிகரித்து, ரூ. 4,303 கோடியாக இருந்தது. இந்த வருவாய் 2023–24-ம் நிதியாண்டில் மேலும் அதிகரித்து, ரூ. 6,628 கோடியாக உயர்ந்தது.