
தமிழ்நாட்டிலும் தில்லி பாணியில் அரசியல் செய்ய பாஜக கனவு காண்பதாகவும் அது செல்லுபடியாகாது என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக்கில் ரூ. 1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருக்கலாம் என அண்மையில் அறிக்கை வெளியிட்டது. இதுதொடர்பாக, மார்ச் 17 அன்று சென்னை எழும்பூரிலுள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போகிறோம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
இதன்படி, சென்னை எழும்பூரிலுள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்த பாஜக இன்று திட்டமிட்டது. ஆனால், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன், வினோஜ் பி செல்வம் உள்ளிட்ட தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் காவல் துறையினரால் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டார்கள்.
இந்நிலையில் தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
"2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாற்றுக் கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களில் அவர்களை நாங்கள் பழிவாங்க மாட்டோம் என்று நரேந்திர மோடி சொன்னார். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் மாற்றுக் கட்சிகள் எங்கெல்லாம் ஆட்சியை நடத்துகின்றனவோ, அங்கெல்லாம் ஆட்சியை மாற்றுவது, கட்சிகளை உடைப்பது போன்ற செயல்களை தான் பாஜக அரசு செய்து வருகிறது.
இப்படி பழிவாங்குவதற்கு அடியாள்களாக அமலாக்கத் துறையைப் பயன்படுத்துகிறார்கள். அமலாக்கத் துறை மூலம் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பாஜகவில் இணைந்து புனிதம் அடைந்து விடுகிறார்கள். பாஜகவில் இணையாதவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. அமலாக்கத் துறையை ஒரு கேடயமாக அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
இன்று காலை சென்னையில் ஓர் ஊர்வலத்தை நடத்த பாஜக அனுமதி கோரி, அதற்கு அனுமதி கிடைக்கப்பெறவில்லை. இந்தச் சூழலில் தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலின் முதல் குற்றவாளி என்று தவறான செய்தியைச் சொல்லியிருக்கிறார். இது முழுக்க முழுக்க சட்டவிரோதமான செயல். பிரதமர் நரேந்திர மோடியை முதல் குற்றவாளி என்று சொன்னால் அண்ணாமலை ஏற்றுக்கொள்வாரா?
நீங்கள் ஏன் பாஜகவில் இணையக் கூடாது என செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை கேட்டதாக நீதிமன்றத்திலேயே அவருடைய வழக்கறிஞர் கபில் சிபல் அதிர்ச்சித் தகவலைச் சொன்னார்.
அமலாக்கத் துறையை ஒரு கருவியாக அவர்கள் பயன்படுத்துகிறார்கள். ரூ. 1,000 கோடி ஊழல் என்கிறார்கள். அமலாக்கத் துறை சோதனை நடத்தி எவ்வளவு நாள்கள் ஆகிவிட்டன? இதுவரை ஆதாரம் எதையாவது காட்டினார்கள்? ஆதாரம் இருக்கிறதா? எங்களுடைய அமைச்சர் செந்தில் பாலாஜி அதைத் தெளிவாக மறுத்திருக்கிறார். எதை வேண்டுமானாலும் சந்திக்கத் தயார் என்று சொல்லியிருக்கிறார். தில்லி பாணியில் தமிழ்நாட்டில் அரசியல் செய்துவிடலாம் என பாஜக கனவு காண்கிறது. தமிழக மக்கள் விழிப்புணர்வு மிக்கவர்கள். எனவே எவ்வித பாஜகவின் பாய்ச்சலும் இங்கு செல்லுபடியாகாது.
தமிழ்நாட்டுக்கு நிதியை விடுவிக்க மத்திய அரசு மறுக்கிறது. இதையெல்லாம் கண்டித்து தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகப் போராட்ட தமிழ்நாடு பாஜக தாயாரா? அப்படி போராடினால், ஒற்றை இலக்கத்தில் இருந்து இரட்டை இலக்கத்துக்கு வருவார்கள். ஆனால், அவர்கள் போராடத் தயாராக இல்லை. காரணம், தமிழ்நாட்டு மக்களின் நலன்கள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை.
தமிழ்நாடு முதல்வர் எந்தத் தவறுக்கும் இடம் கொடுக்க மாட்டார், உடந்தையாக இருக்க மாட்டார், துணை போக மாட்டார்.
அனுமதி இல்லாமல் போராடச் செல்லும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழியிலேயே கைது செய்யலாம்.
அமலாக்கத் துறை சோதனை நடத்தி எவ்வளவு நாள்கள் ஆகிவிட்டன. இதுவரை எந்த ஆதாரத்தையும் அவர்கள் வெளியிடவில்லை. அண்ணாமலை சொல்லும் ரூ. 1,000 கோடி என்பதை அமலாக்கத் துறை சொல்கிறது. அண்ணாமலை சொல்லும் கிளிப் பிள்ளையாக அமலாக்கத் துறை செயல்பட்டு இருக்கிறது. இதில் நீங்கள் யாரும் நினைக்கும்படி முதல்வரைச் சிக்க வைக்க முடியாது. இதில் அவருக்கு எவ்விதமான சம்பந்தமும் இல்லை. ஊழல் நடக்கவே இல்லை" என்றார் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி.