ஹிந்தி கற்பதில் தமிழ்நாடு முதலிடம்
தென் இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாட்டில் இருந்துதான் அதிக நபர்கள் ஹிந்தி மொழியைக் கற்றுக்கொள்வதாக, சென்னையில் உள்ள தக்ஷிண பாரத் ஹிந்தி பிரச்சார சபா தகவல் தெரிவித்துள்ளது.
தக்ஷிண பாரத் ஹிந்தி பிரச்சார சபாவின் மூலம் ஹிந்தி படிக்க விரும்புபவர்களுக்கு, வயது வரம்பின்றி பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்குப் பிறகு ஹிந்தி மொழியில் முறையாக தேர்ச்சி பெற்ற சான்றிதழ்களைப் பெற, சம்மந்தப்பட்ட நபர்கள் தேர்வுகளை எழுத வேண்டும். இதற்காக மொத்தம் 8 தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்த தேர்வுகளை ஆண்டுக்கு 2 முறை ஹிந்தி பிரச்சார சபா நடத்துகிறது. அந்தவகையில் நடப்பாண்டில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகியவற்றில் இருந்து மொத்தம் 4,73,650 நபர்கள் தேர்வுகளை எழுதியுள்ளனர். இதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் மொத்தம் 3,54,655 நபர்கள் தேர்வுகளை எழுதியுள்ளனர் என்று ஹிந்தி பிரச்சார சபா தகவல் அளித்துள்ளது.
1918-ல் தக்ஷிண பாரத் ஹிந்தி பிரச்சார சபாவை அன்றைய மதராஸ் நகரத்தில் மகாத்மா காந்தி அவர்கள் நிறுவினார். தென் இந்திய மாநிலங்களில் ஹிந்தியைப் பயிற்றுவிப்பதே இந்த அமைப்பின் முழு நோக்கமாகும். 1918 முதல் 1948 வரை இந்த அமைப்பின் தலைவராக மகாத்மா காந்தி செயல்பட்டார்.