ஜே.இ.இ. தேர்வில் பின்தங்குகிறதா தமிழகம்?

தமிழகத்தைச் சேர்ந்த எந்த ஒரு மாணவரும் இந்த முறை 300 மதிப்பெண்களை தாண்டவில்லை.
ஜே.இ.இ. தேர்வில் பின்தங்குகிறதா தமிழகம்?
ANI
1 min read

இரு தினங்களுக்கு முன்பு வெளியான ஜெ.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 1,859 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், அத்தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.

நாடு முழுவதும் உள்ள ஐஐடிகளில் இளங்கலை பொறியியல் பட்டப்படிப்பில் சேர்வதற்கான ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. ஜனவரி, ஏப்ரல் என இரு முறை நடத்தப்படும் ஜே.இ.இ. முதன்மை தேர்வில் தேர்ச்சியடையும் மாணவர்கள், ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வில் கலந்துகொள்ளலாம்.

ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வில் தலா 180 மதிப்பெண்களைக் கொண்ட இரு தாள்கள் இருக்கும். அட்வான்ஸ்டு தேர்வின் முடிவுகளை வைத்து தயாரிக்கப்படும் தரவரிசைப் பட்டியலை மூலம் நடைபெறும் கலந்தாய்வு வழியாக ஐஐடிகளில் மாணவர்கள் சேர்க்கை நடக்கும்.

இந்நிலையில், நடப்பாண்டில் நடைபெற்ற ஜே.இ.இ. முதன்மை தேர்வில் ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் உள்ள 14.75 லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் தேர்ச்சி பெற்று 1,80,422 மாணவர்கள் ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வில் கலந்துகொண்டனர். அட்வான்ஸ்டு தேர்வு முடிவு கடந்த ஜூன் 2-ல் வெளியானது. இதில் 54,378 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

குறிப்பாக, தமிழ்நாட்டில் இருந்து ஒட்டுமொத்தமாக 1,859 மாணவர்கள் மட்டுமே அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பாக, தமிழகத்தின் அதிகபட்ச ரேங்காக ஈரோட்டைச் சேர்ந்த திவ்யந்த் ஜெயக்குமார் 285 மதிப்பெண்கள் பெற்று, தேசிய அளவில் 80வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வுக்கு தமிழகத்தில் இருந்து 8,488 மாணவர்கள் பதிவு செய்த நிலையில், 7,787 மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர். அதில் 1,859 (23.9%) மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தை ஒப்பிடும்போது, ஆந்திரம் (30.7%), தெலங்கானா (31.5%), கர்நாடகம் (30.6%) ஆகிய தென் மாநிலங்களின் தேர்ச்சி விகிதம் அதிகமாகும்.

கடந்த ஆண்டு முதல் 100 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் இடம்பிடித்த நிலையில், நடப்பாண்டில் திவ்யந்த் ஜெயக்குமார் மட்டுமே இடம்பெற்றுள்ளார். அதிலும் தமிழகத்தைச் சேர்ந்த எந்த ஒரு மாணவரும் இந்த முறை 300 மதிப்பெண்களை தாண்டவில்லை.

தேர்வு குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாதது, மாநிலத்தின் பள்ளிகளில் மாநில பாடதிட்டத்தின் ஆதிக்கம், உயர் கல்விக்கான அதிக வாய்ப்புகள் போன்ற காரணங்களால் ஜே.இ.இ. தேர்வில் தமிழக மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதேநேரம், `தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களால் இரு தாள்களையும் உரிய நேரத்தில் எழுதி முடிக்க முடியவில்லை’ என்று இது தொடர்பாக, ஜே.இ.இ. தேர்வுக்கு பயிற்சியளிக்கும் இயற்பியல் பேராசிரியரான பவன் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in