
அண்டை மாநிலங்களைப்போல தமிழக எம்.பி.க்களுக்கு மாநிலத்தில் அலுவலகம் உள்ளிட்ட வசதிகளை செய்து தரக்கோரி விசிக எம்.பி. து. ரவிக்குமார் தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளார்
எம்.பி.க்கள் அலுவலகத்திற்கான விசிகவின் நீண்ட போராட்டம் என்று தலைப்பிட்டு விசிக எம்.பி. ரவிக்குமார் இன்று (ஜூலை 20) வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது,
`2019-ல் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதுமே எம்.பி.க்களுக்கு அண்டை மாநிலங்களைப்போல அலுவலகம் உள்ளிட்ட வசதிகளைச் செய்து தருமாறு நான் கோரிக்கை வைத்தேன். ஆட்சி மாற்றம் நடந்தபிறகு திமுக அரசிடமும் கோரினேன்.
பொதுப்பணித்துறை அமைச்சரிடமும், உள்ளாட்சித்துறை அமைச்சரிடமும் நேரிலும் சந்தித்துக்கேட்டேன். விழுப்புரத்துக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆய்வுக்கு வந்தபோது அந்த கூட்டத்திலும் இந்த கோரிக்கையை முன்வைத்தேன்.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் 16.05.2022 அன்று நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு (DISHA) கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர், தலைவர் தொல். திருமாவளவனால் எழுத்துபூர்வமாக கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
அதில் 4-வது ஆக பின்வரும் கருத்து முன்வைக்கப்பட்டது:
`4. தமிழ்நாட்டில் ஊராட்சி மன்ற தலைவர் முதல் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் அனைவருக்கும் அலுவலகங்கள் உள்ளன. சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அலுவலகங்கள் அரசால் கட்டித் தரப்பட்டுள்ளன. ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த அலுவலகமும் இல்லை.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித வசதியும் செய்து தராத மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. மாவட்ட அளவில் DISHA கமிட்டியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர்களே உள்ளனர். எனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள வளாகத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினருக்கு அலுவலகம் அமைத்துத் தர வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமையாகும்.
இத்தனை காலமும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டுக் கிடந்ததுபோல் அல்லாமல் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் உரிய கௌரவத்துடன் நடத்துவதுபோல இங்கும் நடத்திட தமிழ்நாடு முதலமைச்சர் முன் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’
இந்தக் கோரிக்கை அரசின் பரிசீலனையில் இருப்பதாக அறிக்கையில் (Action Taken Report) தெரிவிக்கப்பட்டது. 17-வது மக்களவை முடிந்து 18-வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஓராண்டு முடிந்துவிட்டது. இதுவரை இதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சட்டமன்றத் தேர்தல் வரப்போகிறது. இப்போதாவது இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படுமா?’ என்றார்.