மயோனைஸுக்கு ஓராண்டு தடை: தமிழக அரசு அறிவிப்பு

சால்மோனெல்லா பாக்டீரியா காரணமாக உணவு விஷமாக மாற வாய்ப்புள்ளது.
மயோனைஸுக்கு ஓராண்டு தடை: தமிழக அரசு அறிவிப்பு
1 min read

முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக உணவுப் பாதுகாப்புத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட சாஸ் வகைகளில் ஒன்றான மயோனைஸ், துரித உணவுகளான சாண்ட்விச், ஷவர்மா, பர்கர் போன்றவற்றில் சேர்க்கப்படுகிறது.

முட்டையின் வெள்ளைக் கருவுடன் எண்ணெய் சேர்த்து உருவாக்கப்படும் இந்த மயோனைஸ் புட்டிகளிலும், பாக்கெட்டுகளிலும் அடைத்து தனியாகவும் விற்பனை செய்யப்படுகிறது. சைவ உணவுப் பிரியர்களுக்காக முட்டை சேர்க்காமலும் மயோனைஸ் தயாரிக்கப்பட்டு வருகிறது.

கடந்தாண்டு, தெலங்கானா மாநிலத்தில் துரித உணவுகளை உட்கொண்ட பலருக்கும் ஃபுட் பாய்சன் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதைத் தொடர்ந்து அம்மாநில அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், உடல் உபாதைகளுக்குக் காரணமாக மயோனைஸ் இருப்பது தெரியவந்தது.

இதனால், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ன் கீழ் முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் வகைகளுக்கு ஓராண்டு தடை விதித்து கடந்த அக்டோபரில் தெலங்கானா அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், முட்டையில் இருந்து செய்யப்படும் மயோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மயோனைஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பச்சை முட்டையால் உணவு மூலம் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாலும், சால்மோனெல்லா பாக்டீரியா காரணமாக உணவு விஷமாக மாற வாய்ப்பு இருப்பதாலும், தடை விதிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு கேரள அரசும் தடை விதித்திருந்தது.

logo
Kizhakku News
kizhakkunews.in