
மக்களால் தேந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து, தமிழகத்தின் 28 மாவட்ட ஊராட்சி அமைப்புகளுக்குச் சிறப்பு அதிகாரிகளை நியமித்து உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
கடந்த 2019-ல் சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, புதிதாக 9 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதனால் அந்த 9 மாவட்டங்கள் தவிர்த்துப் பிற 27 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளான கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளைத் தேர்தெடுக்க 2019 டிசம்பரில் தேர்தல் நடைபெற்றது.
இதனை அடுத்து தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் வார்டு மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்றன. அதன்பிறகு 2022 செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இந்த 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது.
இந்நிலையில், இந்த 27 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பதவிக்காலம் நேற்றுடன் (ஜன.5) முடிவுக்கு வந்தது. மேலும் பல்வேறு கிராம ஊராட்சிகளை அருகில் இருக்கும் மாநகராட்சிகள், நகராட்சிகளுடன் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனால் பதவிக்காலம் முடிந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தும் பணிகளைத் தொடங்குவதில் தாமதம் ஏற்படும் என்பதை அடுத்து, 28 மாவட்டங்களில் உள்ள 9,624 கிராம ஊராட்சிகள், 314 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 28 மாவட்ட ஊராட்சிகளுக்கான சிறப்பு அலுவலர்களை நியமித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.