சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு எப்.ஐ.ஏ அனுமதி: இரவு 7 மணிக்குத் தொடக்கம்

இரவு 7 மணிக்குக் கார் பந்தயம் தொடங்கும் எனக் குறிப்பிட்டு புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கான எப்.ஐ.ஏ பாதுகாப்பு சான்றிதழை இரவு 8 மணிக்குள் பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் கார் பந்தயத்துக்கான எப்.ஐ.ஏ அனுமதி கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 31) இரவு நேர சாலை ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடங்கவுள்ளது. இந்தக் கார் பந்தயத்துக்கு எதிராக தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விரிவான உத்தரவை கடந்த ஆகஸ்ட் 29-ல் பிறப்பித்தது சென்னை உயர் நீதிமன்றம்.

அந்த உத்தரவில், ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறும் பகுதியில் வசிக்கும் மக்களுக்குத் தகுந்த பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும், பந்தயம் நடைபெறும் பகுதிக்கு அருகே உள்ள அரசுப் பொது மருத்துவமனை மற்றும் பல்நோக்கு மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை பெற எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்று தெரிவித்தனர் நீதிபதிகள்.

மேலும் கார் பந்தயம் நடத்துவதற்கு முன்பு முறையாக எப்.ஐ.ஏ பாதுகாப்பு சான்றிதழ் பெற வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டிருந்தது உயர் நீதிமன்றம். இந்நிலையில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக எப்.ஐ.ஏ அமைப்பால் பந்தயம் நடக்கும் சாலையில் சோதனை மேற்கொள்ள முடியவில்லை.

இதை அடுத்து இன்று பந்தய சாலையில் சோதனை மேற்கொண்ட எப்.ஐ.ஏ இயக்குநர் சாலையின் 10-வது மற்றும் 19-வது வளைவுகளை மாற்றியமைக்க வலியுறுத்தியுள்ளார். அதை சரி செய்த பிறகே சான்றிதழ் கிடைக்கும். அதற்குப் பிறகே பந்தயம் தொடங்கும். எனவே எப்.ஐ.ஏ சான்றிதழ் பெற கால நீட்டிப்பு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

மாலை 4.30 மணிக்கு நடந்த இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், இன்று இரவு 8 மணிக்குள் எப்.ஐ.ஏ பாதுகாப்பு சான்றிதழைப் பெற வேண்டும், இல்லையென்றால் கார் பந்தயத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது உயர் நீதிமன்றம்.

இதை அடுத்து பந்தயத்துக்கான முதற்கட்ட எப்.ஐ.ஏ அனுமதி கிடைத்துள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு கார் பந்தயம் தொடங்கும் எனக் குறிப்பிட்டு புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in