திருவள்ளுவர் திருநாள் விருதுகள்: தமிழக அரசு அறிவிப்பு

திருவள்ளுவர் திருநாள் விருதுகள்: தமிழக அரசு அறிவிப்பு

எல். கணேசனுக்கு பேரறிஞர் அண்ணா விருதும், து. ரவிக்குமாருக்கு அண்ணல் அம்பேத்கர் விருதும், விடுதலை ராஜேந்திரனுக்கு தந்தை பெரியார் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

தமிழ்த்தொண்டாற்றி வரும் பல்வேறு அறிஞர்களுக்குத் தமிழக அரசால் வழங்கப்படும் திருவள்ளுவர் திருநாள் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருக்குறள் நெறி பரப்பும் ஒருவருக்கு 1986 முதல் வழங்கப்படும் அய்யன் திருவள்ளுவர் விருது, செந்தமிழ்ச் செம்மல் பெரும் புலவர் மு. படிக்கராமுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்ச் சமுதாயம் முன்னேற்றம் காண அயராது பாடுபடும் ஒருவருக்கு 2006 முதல் வழங்கப்படும் பேரறிஞர் அண்ணா விருது, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றவரும், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவருமான எல். கணேசனுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரதியார் புகழ் பரப்பும் வகையில் கவிதை உரைநடை நூல்களைப் படைத்தோருக்கும், பிறவகையில் தமிழ்த்தொண்டு புரிவோருக்கும் 1997 முதல் வழங்கப்படும் மகாகவி பாரதியார் விருது, கவிஞர் கபிலனுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்க் கவிஞர் ஒருவருக்கு 1978 முதல் வழங்கப்படும் பாவேந்தர் பாரதிதாசன் விருது, கவிதைப் பேரொளி பொன். செல்வகணபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு 1979 முதல் வழங்கப்படும் தமிழ் தென்றல் திரு.வி.க. விருது, மருத்துவ அறிவியலில் ஏராளமான கட்டுரைகளையும், குறுநூல்களையும் எழுதியுள்ள மருத்துவர் ஜி.ஆர். இரவீந்திரநாத்துக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த தமிழறிஞர் ஒருவருக்கு 2000-ம் ஆண்டு முதல் வழங்கப்படும் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, வே.மு. பொதியவெற்பனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட 6 விருதாளர்களுக்கும், ரூ. 2 லட்சம் பரிசுத்தொகை, ஒரு சவரம் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கப்படும்.

சமூக நீதி கிடைக்கப் பாடுபட்டவர்களைச் சிறப்பிக்கும் வகையில் 1995 முதல் வழங்கப்படும் தந்தை பெரியார் விருது, விடுதலை ராஜேந்திரனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு 1998 முதல் வழங்கப்படும் அண்ணல் அம்பேத்கர் விருது, நாடாளுமன்ற உறுப்பினர் து. ரவிக்குமாருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் விருதாளர்களுக்கு, ரூ. 5 லட்சம் பரிசுத்தொகை, ஒரு சவரம் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கப்படும்.

முத்தமிழறிஞர் கலைஞர் அடியொற்றி தமிழுக்குத் தொண்டாற்றும் ஒருவருக்கு 2024 முதல் வழங்கப்படும் முத்தமிழறிஞர் கலைஞர் விருது, முத்து வாவாசிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ரூ. 10 லட்சம் பரிசுத்தொகை, ஒரு சவரம் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கப்படும்.

அனைத்து விருதுகளும், திருவள்ளுவர் திருநாளான ஜனவரி 15 அன்று சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலினால் விருதாளர்களுக்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in