
டெங்கு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், டெங்கு பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் பற்றி தமிழ்நாடு அரசு விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
"பருவமழை பெய்து வரும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்தும் விதத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையினர் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
ஜனவரி 2024 முதல் நவம்பர் 5 வரை, தமிழ்நாட்டில் 20,138 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்கள் குணமடைந்துள்ளனர். துரதிருஷ்டவசமாக, பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த மருத்துவச் சிகிச்சை பெற மருத்துவமனையை அணுகுவதில் தாமதம் ஏற்பட்டதால் 8 பேர் உயிரிழந்தார்கள். இதில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியின் மரணமும் அடங்கும். டெங்கு பரவுவதைத் தடுக்கவும் டெங்கு தொடர்பான இறப்புகளை மேலும் குறைக்கவும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசின் இந்தத் தீவிர நடவடிக்கைகளால், டெங்கு இறப்பு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் பதிவான டெங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (2022 முதல் 2024 வரை)
2022: 30,425
2023: 29,401
2024: 20,138 (நவம்பர் 5 வரை)" என்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, டெங்குவைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் பட்டியலிடப்பட்டன.
அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் காய்ச்சல் சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன.
4,031 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் நோய் கண்காணிப்பு அறிக்கைகள் ஆய்வு செய்யப்படுகின்றன.
நடமாடும் மருத்துவக் குழுக்கள் 23,689 முகாம்களை நடத்தி நவம்பர் 5, 2024 நிலவரப்படி 13,18,349 பேருக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு பரிசோதனை மையங்கள் 35-ல் இருந்து 4,031 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.